அதிமுகவின் கொடிகாத்த குமரன்!

அதிமுகவின் கொடிகாத்த குமரன்!

கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சென்னையின் பல்வேறு சாலைகளில் அமைச்சர் கொடியை ஏந்தியபடி செல்வதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் பலரும் அவரோடு மற்ற பைக்குகளில் கொடி பிடித்தபடி இணைந்து கொண்டனர்.

காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி நிரல் சூறாவளி சுற்றுப்பயணம் நான்கு மணி நேரம் தொடர்ந்தது. அடுத்தடுத்த இடங்களுக்கு பைக்கில் வலம் வந்தார் ஜெயக்குமார். அன்னதானம், இலவச வேட்டி சேலைகள், மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஒவ்வொரு இடங்களிலும் சென்று கொடுத்தபடியே இருந்தார். ஓரிடத்தில் முடித்துக்கொண்டு மற்றொரு இடத்திற்கு ஜெட் வேகத்தில் பறந்தது பைக் பேரணி.

அதிமுக கொடியை உயர்த்திப் பிடித்தவாறு ஒரு இளைஞனைப் போல குதூகலத்தோடு அமைச்சர் ஜெயக்குமார் பைக்கில் வலம் வந்த காட்சி பொதுமக்களை வியக்க வைத்தது. திட்டமிட்டபடியே 40 நிகழ்ச்சிகளிலும் 4 மணி நேரத்தில் கலந்து கொண்டு தன் எண்ணத்தை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார் அவர்.

எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய அதிமுகவின் கொடியை மக்கள் மத்தியில், மனதில் கொண்டு சேர்க்கும் வகையில் கைகளில் கொடி தாங்கி வந்த அமைச்சரை, இவர் அதிமுகவின் கொடிகாத்த குமரன் என்று பொதுமக்கள் பலர் பாராட்டி மகிழ்ந்தனர்.