அதிரடி ஆக்‌ஷனில் சுட்டுப்பிடிக்க உத்தரவு!


Instagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.

படத்தைப் பற்றி மேலும் கூறும்போது, “இந்த கதை ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவத்தை பற்றியது. ஒரு கொள்ளைக்கார கும்பல் அவள் வாழும் பகுதியில் நுழையும் போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றியது. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இந்த கதையை சொன்ன போதே, வேகமாக போகும் இந்த திரில்லர் படத்தில் என் பகுதிகள் தான் ஆறுதலாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்த படத்தில் என் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் இப்போது சொல்ல முடியும். இந்த படத்தில் ஒரு சேரி பெண்ணாக நடிக்க எந்தவிதமான சிறப்பு பயிற்சியையும் நான் எடுக்கவில்லை. உண்மையில், என் கதாபாத்திரம் அத்தகைய முயற்சிகளை கோரவில்லை. நான் கோயம்புத்தூர் பெண்ணாக நடிப்பதால், அதற்கேற்றவாறு வட்டார வழக்கில் மட்டும் பேச வேண்டியிருந்தது” என்றார்.

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருகிறார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப்பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14, 2019 அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.