*ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்*
80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது.
ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை? ஒன்பது குழி சம்பத் படத்தின் ஒரு வரி கதை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு….
*ஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே? அது என்ன ஆன்லைன் தியேட்டர்?*
தியேட்டரில் படம் பார்க்கும் சுகமே தனி சுகம்தான். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தியேட்டரில் படம் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இணையத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. Over The Top telecast எனப்படும் OTT முறையில் இணையத்தில் படங்கள் வெளியாகின்றன.
உதாரணத்திற்கு, அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்றவை 5000 படங்களை தனது பக்கத்தில் வலையேற்றி வைத்திருக்குகிறது. அதற்கு மாதமாதம் சந்தா கட்ட வேண்டியது இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த படங்களும் இருக்கும். பிடிக்காத படங்களும் இருக்கும். இது ஒரு வகையான ஆன்லைன் ஸ்ட்ரீம் சினிமா பக்கம்.
எங்கள் படத்தை நாங்கள் Pay Per View (PPV) என்ற கான்செப்டில் வெளியிட இருக்கிறோம். அதாவது, உங்களுக்கு பிடித்தப் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அப்படத்தை மட்டும் பார்க்கலாம். எளிமையாக சொல்லுவதென்றால், எப்படி ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோமோ, அதே போல, ஆன்லைனில் அப்படம் ரிலீஸ் ஆகும் தேதியில், டிக்கெட் எடுத்து, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்க்கலாம். அதனால்தான் இதை ஆன்லைன் தியேட்டர் என்கிறேன்.
இதில் ஒரே ஒரு டிக்கெட் கட்டணத்தில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கலாம். தியேட்டருக்கு செல்லும் பயண நேரம் மிச்சமாகும். டிராபிக் தொல்லை இல்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டதே என்ற வருத்தமும் இல்லை. தியேட்டரில் பார்க்கிங், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் இருந்து விடுபட இந்த ஆன்லைன் தியேட்டர் முறை சிறந்தது என்றே சொல்வேன்.
*இந்த ஆன்லைன் தியேட்டர் முன்னெடுப்பை இங்கே யார் செய்திருக்கிறார்கள்?*
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சி.வி.குமார் முன்னெடுத்து இதை செய்திருக்கிறார். ரீகல் டாக்கிஸ் என்ற ஆப் மூலம் இந்த ஆன்லைன் தியேட்டரைக் கொண்டு வந்திருக்கிறார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு, பிரபல கதாநாயகன் நடித்த படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கிறது. குறைந்த பட்ஜெட்டில், தரமான படத்தை தயாரித்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த Pay Per View எனும் ஆன்லைன் தியேட்டர் முறையில் வாரம் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, தங்களுக்குப் பிடித்த படத்தை மட்டும், குறைந்த கட்டணத்தில் பார்த்து மகிழலாம். ஆன்லைன் தியேட்டரில் படத்தை வெளியிட்டாலும், அப்படத்தின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால் ரசிகனுக்கும் லாபம், தயாரிப்பாளருக்கும் லாபம்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், இதே ஆன்லைன் தியேட்டரில் மதுபானக்கடை படம் வெளியானபோது, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. அதனால் அது சரியாக இணையத்தில் வெளியாகவில்லை. இன்றோ இணையம் வழியாக பணம் செலுத்துவது எளிதாகிவிட்டது. எனக்குத் தெரிந்து ஆன்லைன் தியேட்டரில் முதன் முதலாக வெளியாகும் படம் எங்களுடைய ஒன்பது குழி சம்பத் என்பேன்.
*தியேட்டரில் ஓடினாலே திருடி, இணையத்தில் வெளியிடுகிறார்கள்? ஆன்லைன் தியேட்டரில் வருவதை திருடமாட்டார்களா என்ன?*
திருட மாட்டார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் படத்தை ஆன்லைனில், மிகத் தெளிவாக, எவ்வித இரைச்சலுமின்றி, தடங்கலுமின்றி நாங்கள் வெளியிடுவதால், கட்டணத்தைச் செலுத்தி படத்தைப் பார்ப்பார்கள். தமிழர்கள் என்றும் அடுத்தவன் உழைப்பை திருடுவதில்லை. நல்ல படங்களை கொண்டாடமல் விட்டதும் இல்லை. ஆன்லைனில் தக்க பாதுகாப்போடு வெளியிடுவதால் திருட்டு பயம் இருக்காது.
*ஒன்பது குழி சம்பத் படம் பற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்…?*
தலைவர் நடித்த கபாலி, பேட்ட ஆகிய படங்களை இயக்கியவர்களோடு படம் தயாரித்த சூப்பர் ஹிட் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவர் எங்கள் படத்தை மகிழ்ச்சியோடு வெளியிட சம்மதித்தது, எங்களுக்கு படம் பாதி வெற்றி பெற்ற மகிழ்ச்சி.
கிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்துகொண்டிருக்கும் போக்கிரி இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசைமாறிப்போகிறது என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்று கிராமங்களும் நகரங்களைப் போலவே இருக்கின்றன. எங்கள் படத்தில் தொழில்நுட்ப வசதி இல்லாத கிராமத்தைப் பார்ப்பீர்கள். திருச்சியில் உள்ள கிராமத்தை கேமரா கண்களில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம்.
அறிமுக நாயகன் பாலாஜி, அறிமுக நாயகி நிகிலா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிகிலாவிற்கு தமிழில் முதல் படம் இதுவே. வெளியாக தாமதம் ஆனதால் அவர் நடித்த பல்வேறு படங்கள் வெளிவந்துவிட்டன.
ஆர்.கே.செல்வமணியிடம் இணை இயக்குநராக இருந்த ஜா.ரகுபதியின் இயக்கத்தில், கொளஞ்சிநாதனின் ஒளிப்பதிவில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் முத்தான வரிகளில், சார்லியின் இசையில் ஒன்பது குழி சம்பத் உருவாகி இருக்கிறான். கண்மணி குணசேகரன் எழுதி பாடி இருக்கும் ஒப்பாரி பாடல் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். மீதி வெற்றியை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் என்று நம்புகிறேன். நன்றி!