சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரே கதை தான். படத்தில் ஒரு கொலை அல்லது ஏதோ ஒரு க்ரைம் நடந்து விட, அது யாரால் செய்யப்பட்டது எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த கதையாக இருக்கும்.
அதை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல முடியுமோ அவ்வளவு விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ் கலந்தும் சொல்வதுதான் படத்தின் வெற்றி. அந்த வகையில் இறுதி பக்கம் படம் பற்றி ஒரு கண்ணோட்டம்
தனிமையில் வசிக்கும் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ பிரச்சனை இருப்பது முதல் காட்சியில் சொல்லப்பட, அதன் தொடர்ச்சியாக வரும் காட்சியில் அவர் கொல்லப்படுகிறார். அந்த கொலையை துப்பறிய இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன் நியமிக்கப்படுகிறார்.
அவருக்கு இந்த பணியில் உதவியாக பெண் போலீஸ் அதிகாரியான கிரிஜா ஹரி நியமிக்கப்பட எப்படி அந்த கொலையை துப்பறிந்தார்கள் என்பதுதான் கதை. வசீகரிக்க கூடிய அழகில் அம்ருதா ஸ்ரீனிவாசன் இருக்க அவரைப் பற்றி துப்பறியும் போது பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகின்றன ராஜேஷ் பாலச்சந்திரனுக்கு.
முதலில் அம்ருதாவின் உடலை பிணமாக பார்த்த அவரது நண்பர் ஸ்ரீ ராஜ் சொல்லும் தகவலில் இருந்து திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன. அம்ருதாவும் ஸ்ரீ ராஜும் லிவ் இன் டு கெதர் அடிப்படையில் இரவில் மட்டுமே ஒன்றாக இருந்ததாகத் தெரியவர, அடுத்த கட்ட விசாரணையில் அம்ருதாவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவருகிறது.
அந்தக் காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் சொல்லும் அமிர்தாவை பற்றிய உண்மைகள் இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றன. அது பல ஆண்களுடன் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணுடனும் அம்ருதாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றியவை.
சந்தேகம் ஒவ்வொருவர் மீதாக திரும்பிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியான கிரிஜா ஹரியின் மீது சந்தேகம் விழுவது எதிர்பாராத திருப்பம்.
எழுத்தாளராக இருக்கும் அழகில் கவர்வதைப் போலவே அலட்டிக்கொள்ளாமல் நடித்தும் இருக்கிறார். அறிமுகப் படத்திலேயே இவ்வளவு அதிர்ச்சியான ஒரு பாத்திரத்தில் நடித்த அவரது தைரியத்தைப் ஆக வேண்டும்.
அவருடன் லிவ் இன் பார்ட்னராக வந்த ஸ்ரீ ராஜும், காதலனாக வரும் விக்னேஷ் சண்முகமும் அம்ருதாவின் அழகுக்கு ஈடு செய்யவில்லை என்றாலும் அவரவர்கள் பாத்திரத்துக்கேற்ற தோற்றத்தில் இருக்கிறார்கள்.
தன் வாழ்க்கையை தன் விருப்பம்போல் வாழும் அம்ருதா சொல்லும் காரணங்கள் பார்வையாளர்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை. ஆனாலும் பெண் என்று சார்ந்து சிந்திக்கும் போதும் அவர் ஒரு எழுத்தாளர் என்ற பார்வையில் பார்க்கும்போதும் அவரது செய்கைகள் நியாயமானதாக தோன்றும்
கடைசியில் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்கப்பட்டு விட, அதன் தொடர்ச்சியாக வரும் கிளைமாக்ஸ் நாம் முற்றிலும் எதிர்பாராதது.
அதிலும் இந்த கேசை துப்பறியும் ராஜேஷ் பாலச்சந்திரனும் கூட இந்த வலைக்குள் இருப்பது ஒரு கட்டத்தில் தெரியவர நமக்கு மட்டுமல்லாமல் அவருக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆனால் இந்தப் பிரச்சினைக்குள் சிக்கும் ஸ்ரீராஜ் எப்படி தன் குற்றத்தை ஒத்துக்கொண்டார் என்பது புரியவில்லை. என்னதான் சந்தர்ப்பங்கள் அவரை சிக்க விட்டாலும் அதை அவர் மறுக்கவே இல்லை என்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
திரைக்கதையில் எழுப்பப்படும் கேள்விகள் அனைத்துக்கும் பின்னால் விடை தெரியும் போது அதற்கு முன்னால் வந்த காட்சிகளிலேயே விடை இருப்பது நமக்கு புரிய வருவது திரில்லான அனுபவம்.
பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு இதமாக இருக்கிறது. ஒரு திரில்லருக்குரிய பின்னணி இசையை தந்திருக்கும் ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் ரசிக்க வைக்கிறது.
எந்த இடத்திலும் அலுப்புத் தட்டாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனர் மனோ வெ. கண்ணதாசனுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
முற்றிலும் புதியவர்கள் இணைந்து படைத்திருக்கும் இந்தப் படம் பாராட்டுக்குரியது.
இறுதிப் பக்கம் – சிறப்பான ஒரு பக்கம்