“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

இன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே  வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி வருகிறார்கள். படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப்படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

படத்தில் பணிபுரிந்தது பற்றி இசையமைப்பாளர் சத்யா பகிர்ந்து கொண்டது….
பல சாதனைகள் புரிந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்தப்படத்தில் பணிபுரிந்ததை நான் மிகுந்த பெருமையாகவும், எனக்கு கிடைத்த கௌரவமாகவும் கருதுகிறேன். இத்தகையதொரு படத்தில் எனது புதுமையான முயற்சிகளுக்கும்,  யோசனைகளுக்கும் செவிமடுத்த இயக்குநர் பார்த்திபன் சார் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு திறமையான திரைக்கதை எழுத்தாளர் உள்ளத்தளவில் ஒரு இசைக்கலைஞனும் கூட, அவர் இசை என்பது ஒரு கருவி அல்ல அது படத்தின் உயிர். படத்தில் உலவும் கதாப்பாத்திரம் போன்றது என்பதை அறிவார்.

உண்மையாய் சொல்வதானால் பார்த்திபன் சார் படத்தை பாடல்கள் மற்றும் இசையே இல்லாமல் ரசிகர்கள் ரசிக்க தயாராய் இருப்பார்கள். அவரது திரைக்கதையும்,  வசனங்களும் ரசிகர்களை சுவாரஸ்யத்தின் உச்சியில் கட்டி வைத்திருக்கும் தன்மைகொண்டது.

முதலில் படத்தின் இசையற்ற பதிப்பை நான் பார்த்தபோது பார்த்திபன் சார் பல இடங்களை வசனங்களே  இல்லாமல் இசை நிரப்பிக் கொள்ளும்  இடங்களை உருவாக்கி வைத்திருந்தார். எனக்கான தளத்தை உருவாக்கி தந்திருந்தார். இப்போது படத்தினை   பார்த்துவிட்டு பின்னணி இசைக்கும்  கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும்  பார்த்திபன் சாருக்கு உரியது. “குளிருது புள்ள” எனும் ஒற்றைப் பாடல் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று சந்தோஷ் நாரயணன் அவர்களும் பிரமிப்பை தந்துள்ளார் அவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்று வருகிறது.