க் – விமர்சனம்

கதை கூறும் போது பாதியில் விட்டுச் சென்றால், என்னப்பா “க்” வச்சிட்டு போற, முழுசா சொல்லிட்டுப் போ என்பார்கள். அந்த ஒரு மையத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் முழுதாக கூற வந்ததை கூறிவிட்டுச் சென்றதா என்று பார்ப்போம்.
அறிமுக நாயகன் யோகேஷ் மற்றும் குரு சோமசுந்தரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கிறது “க்”. “ஜீவி” படத்தின் எழுத்தாளர் பாபு தமிழ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கதைப்படி,
நாயகன் யோகேஷ், தமிழக அணி சார்பில் விளையாடும் நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரர். ஒருநாள் கால்பந்து விளையாடும் போது தலையில் பலமாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் நாயகன் யோகேஷ்.
அந்த மருத்துவமனையின் ஜன்னல் வழியே, ஒரு கொலை சம்பவம் நடைபெறுவதை பார்த்துவிடுகிறார் யோகேஷ். ஆனால், அங்கு சென்று பார்க்கும் போது எந்த தடயமோ கொலை நடந்ததற்கான எந்த ஒரு அறிகுறியோ அதில் இல்லை.
யோகேஷிற்கு உதவியாளராக பணிக்கு வருகிறார் குரு சோமசுந்தரம். யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் வர, அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் யோகேஷ் தமிழ் சினிமாவிற்கு புதுவரவு. கட்டுடலுடன் சற்று மிரட்டலான லுக் இருந்தாலும், தமிழ் சினிமாவிற்கென்ற உடல்வாகு மொழியை இன்னும் சற்று கொண்டு வந்திருக்கலாம். மொத்த கதையும் இவர் மீது பயணப்படுவதால் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாயகி அனிகா பார்ப்பதற்காக அழகாக இருக்கிறார். காட்சிகளிலும் அழகாகவே நடித்து இருக்கிறார். குருசோமசுந்தரம், வழக்கம்போல் தனக்கே உரித்தான உடல்மொழியில் மிரட்டியிருக்கிறார்.
ஆங்காங்கே க்,க் , க் வைத்துச் சென்று க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த ”க்”கிற்கெல்லாம் பதில் கூறினாலும், மூளையை கசக்க வைத்திருக்கிறார் இயக்குனர். எளிய பார்வையாளர்கள் ரசிகர்கள் சற்று புரியும்படியான கதையோட்டத்தை இன்னும் சற்று எளிய முறையில் கொடுத்திருக்கலாம்.
கவாஸ்கர் அவினாஸின் இசையில் பாடல்கள் ஓகே பின்னனி இசை கதையோடு பயணிக்கிறது ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்

க் – ஒரு புதிரான பயணம்…