‘சிண்ட்ரெல்லா’ என்கிற பெயருக்காகவே நடித்தேன் : நடிகை ராய் லட்சுமி
எஸ். எஸ். ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் திரையிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து படக்குழுவினர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில்
இசையமைப்பாளர் அஸ்வமித்ரா கூறுகையில்,
“கபிலன் வைரமுத்து மற்றும் என் மனைவி ஜெயந்தி எழுதியது என படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தில் ராய் லக்ஷ்மி மற்றும் சாக்ஷி ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக வந்துள்ளது.படத்திற்குப் பின்னணி இசை அமைத்த போதே அவர்களின் நடிப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் இயக்குநர் பன்முகத்திறன் கொண்டவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது ” என்றார்.
ஒளிப்பதிவாளர் ராமி பேசும்போது,
“யாமிருக்க பயமே’ படத்துக்குப் பிறகு இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படக் குழுவினருடன் நான் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.’சிண்ட்ரெல்லா’ தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவமாக இருக்கும்” என்றார்.
நடிகை சாக்ஷி அகர்வால் பேசுகையில்,
“இயக்குநர் வினூ கதையை விவரித்தபோது, அடுத்த காட்சி என்ன என்று நான் பரபரப்படைந்தேன். அடுத்த காட்சி கேட்பதற்கு நான் மிகவும் ஆவலாக இருந்தேன். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாகக் கதை சொன்னார்.நான் வில்லியாக நடிக்கப் போகிறேன் என்று இயக்குநர் சொன்னபோது நான் அதை எதிர்பார்க்காததால் ஆச்சரியமடைந்தேன். ராய் லட்சுமி நடிப்பில் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் வினூ குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பான பணியைச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராமி சார் தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.அது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாகத் தெரியும்” என்றார்.
நடிகர் அன்பு தாசன் கூறுகையில்,
“இயக்குநர் வினூ உண்மையில் ஒரு அற்புதமான நபர். நாங்கள் பல திரைக்கதைகளை விவாதித்து இருக்கிறோம். அப்போதே மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.நடிகை ராய் லட்சுமியின் எளிமையும் பெருந்தன்மையும் கண்ணியத்தையும் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன் .பாலிவுட்டில் மட்டுமல்ல பல மொழிகளிலும் அவர் நடித்து புகழ்பெற்றவர். அப்படிப்பட்ட அவர், அனைவருடனும் மிகவும் அன்புடனும் நட்புடனும் இருந்தார். ஒளிப்பதிவாளர் ராமி இந்தப் படத்தில் தனது ஒளிப்பதிவின் மூலம் ஒரு மந்திரவாதி போல நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார், ஏனெனில் அவரது காட்சிகள் படத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்திக் காட்டும்படி உள்ளன” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் கூறுகையில்,
“இயக்குநர் வினூ என் இளைய சகோதரர் போன்றவர், அவர் என்னை அழைத்து எனக்கு
ஒரு வாய்ப்பு கொடுத்து நடிப்பீர்களா என்றார். நான் அந்த வேடத்தில் நடிப்பேனா என்று சந்தேகம் அவருக்கு. அது ஒரு நல்ல வித்தியாசமான வேடம் தான். சிண்ட்ரெல்லா நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் ரசிக்க ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். ராய் லக்ஷ்மி ஒரு அழகான நடிகை மட்டுமல்ல, நல்ல உள்ளம் கொண்டவர். இயக்குநர் வினூ எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநர், அவரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாகப் பங்கெடுக்க இருக்க விரும்பினார், ஆனால் முடியவில்லை. எனினும், அவருடைய ஆசீர்வாதம் முழுமையாக இங்கே இருக்கும் என்று நம்பலாம் ” என்றார்.
நடிகை ராய் லக்ஷ்மி பேசும்போது,
“நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை எல்லாம் பார்க்கிறேன் ஒரு பெரிய போருக்குப் பிறகு சந்திப்பது போல் இருக்கிறது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் கூடிய உங்கள் முகங்களைப் பார்க்கிறேன். இனி இது தொடரும் என்று நம்புகிறேன்.
‘சிண்ட்ரெல்லா’ ஒரு திகில் பேண்டஸி படம். இது வித்தியாசமான ஹாரர் படம். நிறைய திகில் படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருக்கும். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன. ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் வினூ என்னை அணுகியபோது அதே வகை, என்றாலும் சிண்ட்ரெல்லா என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன்.
சிண்ட்ரெல்லா என்ற பெயரை தேவதைக் கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன்.
ஆனால் அதையே ஒரு திகில் படமாகக் கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார் ,மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. . இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை .ஆனால்
மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது.
போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக அவர் விளக்கினார்.
வேலைக்காரி வேடமும் நான்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொன்ன போது நான் ஒரு கணம் தயங்கினேன். மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அவர்.என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார்.கதையில் மனம் கவரப்பட்டு ஒப்புக்கொண்டேன்.ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அதை விவரித்தார்.
இந்தப்படம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தைக் கொடுத்தது.படத்தின் பாத்திரங்களின் தோற்றம், ஒளிப்பதிவு, இசை என்று சின்னச் சின்ன வேலைகளை கூட அனைவரும் குழுவாக இணைந்து செய்தார்கள்.
படக்குழுவினரின் ஒன்றுபட்ட உழைப்பின் பலனாக இந்த படம் வந்திருக்கிறது.
சிண்ட்ரெல்லாவின் வெற்றிக்குப்பின் வினூவின் கடின உழைப்புதான் அடிப்படையாக இருக்கும் .அவர் உற்சாகமான மனிதர். இது ஒரு ஒட்டுமொத்த குழுவினரின் படம் என்று கூட சொல்லலாம். சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த சம்பந்தப்பட்ட பாத்திரம் சவாலானது. பல நேரங்களில்,அந்தக் கவுனை அணிந்து நடிப்பது மிகவும் சிரமமாகவும் அசெளகரியமாகவும் இருந்தது.படம் பார்க்கும்போது அந்த சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது.ரோபோ சங்கருடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவை.பல காட்சிகளை மேம்படுத்த அவர் உதவினார். அவை ரசிக்கும்படி இருக்கும்.இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம். அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இயக்குநர் வினூ பலவகை திறமைகள் கொண்ட இளைஞர். அவர் தொழில்நுட்ப ரீதியாகவும் அறிந்து வைத்துள்ளார். இசை அறிவும் கொண்டவர்.அவ்வப்போது எனக்கு கிளிப்பிங்ஸ் அனுப்புவார். அதைப்பார்த்த நான் ஆச்சரியப்படுவேன். புதுப் புது சிந்தனைகள் வைத்துள்ளார்.அவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் எண்ணி ஆச்சரியப் படுவேன். அவருடைய கடின உழைப்பின் மூலம் அவர் அளித்த முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் மூன்று படங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது,
சிண்ட்ரெல்லா தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் வினூ வெங்கடேஷ் பேசும்போது,
“பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் பேசவேண்டும் என்று நிறைய தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் இப்போதைய சூழலில் எல்லாமே மறந்து விட்டனர. என் மீது நம்பிக்கை வைத்து ராய் லக்ஷ்மி அவர்கள் இந்த படத்திற்கு அருமையாக நடித்துக் கொடுத்துப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார். அவரது ஆதரவும் நம்பிக்கையும் இல்லையென்றால், இப்படம் எந்த அளவிற்கு வந்து இருக்குமா தெரியாது.அடுத்து நான் நன்றி சொல்ல விரும்புவது ரோபோ சங்கர். அவர் பொதுவாக இந்த மாதிரியான வாய்ப்புகளை ஏற்கமாட்டார். 10-க்கும் குறைவான நாட்கள் கால்ஷீட், ஆனால் அவர் இந்த படத்தில் எனக்காக நடித்து உதவினார். ஆதரவளித்ததற்காக நான் எல்லா நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் நன்றி கூறுகிறேன். சாக்ஷி வில்லி வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா ஒரு வழக்கமான திகில் படமாக இருக்காது.இதுவரை பார்த்த திகில் படங்களில் திரும்பத் திரும்ப காட்டப்பட்டுள்ள சலிப்பூட்டும் விஷயங்கள் இதில் நிச்சயமாக இருக்காது.பேய்களை வைத்து நாங்கள் காமெடி செய்யவில்லை. பேய்களை மரியாதையாகத்தான் காட்டி இருக்கிறோம்.திரையரங்குகளில் ரசிகர்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.