சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’!

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’!

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச் செய்துவிட்டது என்றாலும் ஆதித்யா மியூசிக் நிறுவனம் ‘கபடதாரி’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் நல்ல செய்தியுடன் இப்போது மீண்டும் படக்குழு உற்சாகத்துடன் தன் பணிகளைத் துவக்கியிருக்கிறது.

இது குறித்து பகிர்ந்து கொண்ட க்ரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த க்ரியேடிவ் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் கூறியதாவது…

“ஆதித்யா மியூசிக் போன்ற பிரபல நிறுவனம் எங்கள் இசை ஆல்பத்தை வெளியிடுவது மிகப் பெரிய கெளரவம்தான். பல ஆண்டுகளாகவே இசைத் துறையில் பிரதான பங்களிப்பை வழங்கும் ஆதித்யா நிறுவனம், தனது ஆல்பங்களை முற்றிலும் புதுமையான முறையில் விளம்பரப்படுத்தி அதற்கான உயரங்களை அடையச் செய்து வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் எங்கள் குழு, விரைவில் இசை வெளியீட்டுக்கான தேதியை அறிவிக்கும்” என்றார்.

க்ரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘கபடதாரி’ படம் குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற தயாரிப்பாகும். சிபிராஜ் மற்றும் நந்திதா ஸ்வேதா பிரதான வேடங்களில் நடிக்க நாசர், ஜே.சதீஷ் குமார், சுமன் ரங்கநாதன், ஜெயப்பிரகாஷ் மற்றும் படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பை பிரவீண் கே.எல்.கவனிக்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை கே.எல்.விதேஷ் ஏற்றிருக்கிறார். எம்.ஹேமந்த்ராவ் எழுதிய ஸ்க்ரிப்டை அடிப்படையாகக் கொண்டு தனஞ்ஜெயன் ஜி. மற்றும் ஜான் மகேந்திரன் இருவரும் திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கின்றனர்.