எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு எளியமனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தை கொண்டது இப்புத்தகம். அதேபோல் ஜிப்ஸி படமும் அந்தக்களத்தை தாங்கி நிற்கக் கூடியதே.
விழாவில் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இசை பேசும்போது,
“முதலில் இந்தப்படம் மிகச்சின்னப் படம் என்று தான் நினைத்தோம். ஆனால் ட்ரைலரைப் பார்க்கும் போது தான் தெரிகிறது. நிச்சயம் இது பெரியபடம். ஜீவாவிற்கு இப்படம் பெரிய மைல்கல்” என்றனர்
இசை அமைப்பாளர் டி.இமான் பேசும்போது,
“ஜீவா இந்தப்படத்தில் அடித்து துவம்சம் பண்ணி இருப்பார் என்று நம்புகிறேன். இயக்குநர் ராஜு முருகன் எழுத்து மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. இன்று நான் சந்தோஷ் நாராயணன் இசைக்கு ரசிகனாக வந்துள்ளேன். நிச்சயம் இப்படம் பெரிதாக வெற்றியடையும். இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்
இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “இந்தியாவைப் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று சொல்கிறோம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. இப்படியான சமகால அரசியலை இப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் யுகபாரதி வரிகள் மிகவும் நன்றாக இருந்தது” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது,
“ராஜு முருகன் அண்ணன் எழுதிய பின் தான் நான் எழுதினேன். அப்போது அவரிடம் நிறைய கேட்டு தான் எழுதினேன். நாம் பேச நினைக்கும் அரசியலை அதோட கலைத்தன்மை கெடாமல் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பவர். இந்தப்படம் எதைத் தாங்கி நிற்கிறது என்பதை கணிக்க முடிகிறது. அண்ணன் இப்படியான படங்கள் எடுத்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார். நான் பேசிய முதல் ஹீரோ ஜீவா தான். அவர் இப்படத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார். என்றார்.
இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசும்போது,
“இன்றைய சமூக அவலங்களை கேள்வி கேட்க இருப்பவன் ஜிப்ஸி. இந்த ஜிப்ஸியை கொண்டாட தயாராக இருங்கள். இப்படி ஒரு படத்தை துணிச்சலாக தயாரித்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு நன்றி” என்றார்
இயக்குநர் கோபிநயினார் பேசும்போது,
“இந்தப்படம் மக்கள் நேசிக்கும் படமாக இருக்கும். இந்தமாதிரியான படங்களில் நடிப்பதற்கு சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும். என்னைப் போன்றவர்களுக்கு ராஜு முருகன் தான் பெரிய நம்பிக்கை. அவர் அவரது அரசியலை துணிச்சலாகப் பேசி வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அவர் பதிவு செய்வதின் வழியாக எங்களுக்குப் பெரிய உந்துதலைக் கொடுக்கிறார்” என்றார்
இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது,
“எனக்கு ராஜு முருகன் மீது ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. ஜனாதிபதியை விமர்சனம் செய்து ஜனாதிபதி விருது வாங்கியவர் அவர். ஒரு நேர்மையான பத்திரிகையாளராக பல பயணங்கள் மேற்கொண்டு பல அனுபவங்களைச் சேர்த்திருக்கிறார். இந்த ட்ரைலர் பார்த்து மிரண்டுவிட்டேன். ஜீவா தான் நடிக்க வந்த காலத்தில் இருந்து இப்படியான பெரிய பெரிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். ஜிப்ஸி என்றால் பயணி. அந்த வகையில் இப்படம் உலகத்தில் சிறந்த பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இந்தப் படத்தின் தயாரிப்ப்பாளர் அம்பேத்குமாரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும்” என்றார்
கரு.பழனியப்பன் பேசும்போது,
ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசை அமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அதை செய்து கொடுத்தார். நான் ஆஸ்பிட்டல் போகும் முன்பே அவர் அங்கிருந்தார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும்.
ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார். அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்” என்றார்
தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி பேசும்போது,
“இந்தப்படத்தின் ட்ரைலர் பாடல்கள் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி ஜீவா இசை அமைப்பாளர், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பெரிய வெற்றியாக அமையும். ஒரு தயாரிப்பாளராக அம்பேத்குமாருக்கு இந்தப்படம் நல்ல லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
2டி.எண்டெர்டெயின்மெண்ட் ராஜசேகரபாண்டியன் பேசும்போது ,
“ராஜு முருகன் எதார்த்த மனிதர்களின் கதைகளைத் தொடர்ந்து படமாக்கி வருகிறார். இந்தப்படத்தை எடிட்ல சில காட்சிகளையும் பாடல்களையும் பார்த்தப் போது புதிய அனுபவமாக இர்ய்ந்தது. விழா நாயகன் சந்தோஷ் நாராயணன் சூப்பராக மியூசிக் பண்ணி இருக்கிறார். யுகபாரதிக்கு நான் ரசிகன். “ஜீவா ப்ரதர் உங்களை இவ்ளோ வித்தியாசமா காட்டி இருக்காங்கன்னா நீங்க எவ்ளோ உழைப்பைக் கொடுத்திருக்கீங்கன்னு தெரிகிறது” என்றார்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், பேசும்போது,
“தயாரிப்பாளரின் நல்ல எண்ணத்திற்காகவும் ராஜு முருகன் அண்ணனின் உழைப்பிற்கும் பெரிய வெற்றி கிடைக்கும்” என்றார்
“தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,
” எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமானாலும் அதற்கும் பொருளாதாரம் வேண்டும். தயாரிப்பாளர் இயக்குநருக்கு அதைச் செய்து கொடுத்து இருக்கார். அவருக்கு நன்றி. ஜீவா நல்ல உழைப்பாளி. இந்தப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது. எடிட்டர் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். “என்றார்
கேமராமேன் செல்வா பேசும்போது,
“முதல் நன்றி ராஜு முருகன் சாருக்கு. எனக்கு அண்ணன் இல்லை. அவர் தான் அண்ணன் மாதிரி” என்றார்
மலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது,
” முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னை தான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும் போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள். ” என்றார்.
ஜிப்ஸி படத்தில் நடித்துள்ள பாந்த்சிங் அவர்களின் “துணிவின் பாடகன் பாந்த்சிங்” என்ற நூலை சந்தோஷ் நாராயணனோடு இணைந்து வெளியீட்ட தேனிசை செல்லப்பா பேசும்போது,
“இந்தத் திரைப்படத்தில் நாடோடியாக வரும் ஜீவா மிகச் சிறந்த நடிகர். சாதி இல்லாமல் மதம் இல்லாமல் மனிதனால் வாழ முடியுமா? என்றால் முடியும். அதை தொடர்ந்து உரக்கச் சொல்லுங்கள். அதை அம்பேத்குமார் போன்றவர்கள் ராஜு முருகன் போன்றவர்கள் தொடர்ந்து செய்யும் போது நாங்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம்” என்றார்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது,
” கலைகளை தனது ஆபரணமாக கொண்டு அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தான் ஜிப்ஸி. ஜீவா இப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த மேடையில் ஒரு புத்தகம் வெளியீட்டதற்கு ராஜு முருகனுக்கு முதலில் நன்றி” என்றார்
பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது,
“ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜு முருகனுக்கு அண்ணனாக நன்றிச் சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசியவிருது வாங்கி இருக்கிறான் வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப்படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறான் அதுதான் பெருமை. நான் சந்தோஷ் நாராயணன் சாரின் பெரிய ரசிகர். இந்தப்படத்தின் காரணி அம்பேத்குமார். அவர் இனிஷியல் S. அவர் எதற்குமே நோ சொன்னதே கிடையாது. தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் உலகுக்கு சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். மேலும் இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்” என்றார்
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,
“முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைகஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அம்பேத்குமார் இதுவரை எங்கள் வேலைகளில் தலையிட்டதே இல்லை. எல்லாவிதமான கல்ச்சர் உள்ள மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சேர்க்கும் திரு.டி.எம் கிருஷ்ணா இந்தப்படத்தில் பாடி இருக்கிறார். இந்தப்படத்தில் பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசும்போது,
“ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டில் இருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன் பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் நன்றி” என்றார்
நடிகர் ஜீவா பேசும்போது,
“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள் தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி” என்றார்
—