ஜி வி பிரகாஷ்குமார் , அபர்ணதி, ராதிகா, நந்தன் ராம், பசங்க பாண்டி, ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரது நடிப்பில், அங்காடித்தெரு படத்தின் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஜெயில்’.
வட சென்னையை மையப்படுத்தி கதை நகர்கிறது. வட சென்னையில் காவேரி நகர் பகுதியில் ராதிகாவின் மகனாக வருகிறார் ஜி வி பிரகாஷ். இவரது நண்பராக வருபவர் நந்தன் ராம். இருவருக்கும் போதை பொருளை கைமாற்றுவதும், பொருட்களை திருடுவதும் தான் பிரதான வேலை.
இவர்களது மற்றொரு நண்பராக வருபவர் பாண்டி. சிறுவயதில் திருடியதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, விடுதலையாகி வெளியே வருகிறார். மூன்று நண்பர்களும் மீண்டும் இணைகின்றனர்.

பாண்டி வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வேலை தேடிஅலைகிறார். காவேரி நகர் என்றால் வேலை தர முடியாது என்று பலரும் கூறிவிடுகின்றனர்.
இதனால், தனக்கு சைதாப்பேட்டை எனக்கூறி பெட்ரோல் பங்கில் பணிக்குச் சேர்கிறார்.
இந்நிலையில், போதை கடத்தும் தொழிலில் நந்தன் ராம் , ஜிவி பிரகாஷ் குருப்புக்கும் மற்றொரு கேங்க் கானா முத்து குருப்புக்கும் அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.
ஒருநாள் ஜி வி பிரகாஷ், நந்தன் ராம் மற்றும் பாண்டியை கானா முத்து கேங்க் கொல்ல விரட்டுகிறது. நந்தன் ராமை போட்டுத் தள்ளுகிறது கானா முத்து கேங்க். இதனால் கோபமடைந்த பாண்டி, கானா முத்துவின் நண்பனை கொன்று விடுகிறார்.
மீண்டும் சிறைக்குச் செல்கிறார் பாண்டி. தனித்து விடப்படுகிறார் ஜிவி பிரகாஷ். நண்பனுக்காக கானா முத்து ஜி வி பிரகாஷை பழி தீர்த்தாரா.? பாண்டியை சிறையில் இருந்து ஜி வி காப்பாற்றினாரா.? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜி வி பிரகாஷ்குமார், கர்ணா கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். வட சென்னைக்கே உரித்தான உடல்மொழியில் மிரட்டியிருக்கிறார். நண்பனுக்காக முதல் ஆளாய் நிற்பதும், காதலியுடனான ரொமான்ஸ் காட்சியில் ரொமாண்டிக் செய்வதும் என தனக்கான பணியை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

ஜி வி பிரகாஷின் நண்பர்களாக வந்த நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் சரியான தேர்வு. இருவருக்கும் ஜி வி பிரகாஷிற்கு நிகரான கதாபாத்திரங்கள். தங்களது சுமையை அறிந்து அதற்கேற்றாற் போல், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் இருவரும்.
அதிலும், நந்தன் ராம் வட சென்னை வாலிபரின் மேனரிசத்தை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார்.
நாயகி அபர்ணதி, தமிழ் சினிமாவுக்கு புதுவரவு. அராத்து பிடித்த பெண்ணாக கலகலவென ஜொலித்திருக்கிறார். காத்தோடு காத்தானேன் பாடலில் ரொமன்ஸை அள்ளிக் கொட்டியிருக்கிறார் அபர்ணதி.
அதிக நாட்களாக காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே பார்த்து வந்த ரவிமரியாவை சட்டென வில்லனாக பார்க்கும் போது அதை அவ்வளவு வலுவாக கொடுக்காததால், ரவிமரியா கதாபாத்திரத்தை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் பார்வையும், மிரட்டலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏனோ பொருந்தாமலே நிற்கிறது.
பாண்டிக்கு ஜோடியாக வந்த சரண்யா ரவிச்சந்திரனின் நடிப்பும் எதார்த்தமானது. இன்னும் சற்று கூடுதல் காட்சி கொடுக்கப்பட்டிருந்தால், கதாபாத்திரத்தை இன்னும் சிறப்புற செய்திருப்பார்.
ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரம் பெரிதாக சொல்லும் அளவிற்கு வலுவானதாக கொடுக்கப்படவில்லை.
இன்னமும் வட சென்னை இளைஞர்களை இப்படியாக காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா.? இயக்குனர் வசந்த பாலன் சார் அவர்களே. ஜி வி பிரகாஷ் போனை திருடுவதும், லேப்டாப் திருடுவதும், கஞ்சா விற்பதும் என காட்சிகளை காண்பித்தது வட சென்னை இளைஞர்கள் மீதான கொடூர பார்வையை இந்த இயக்குனர்கள் என்றுதான் மாற்றுவார்களோ. ?
தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரம், எடுக்கப்பட்ட காட்சியமைப்பு, திரைக்கதை என அனைத்தும் பலமாக இருந்தும், கூற வந்த விஷயத்தை கூறாமல் சென்றது பெரும் ஏமாற்றமே. புலம் பெயர்ந்து வரும் குடிவாசிகளின் நிலையை, அவர்களின் வலியை இன்னும் சற்று வலுவாக கூறியிருந்தால், ஜெயிலின் வலி பார்ப்பவர்களையும் சென்றடைந்திருக்கும்.
பின்னனி இசையாக இருக்கட்டும், பாடலாக இருக்கட்டும் இரண்டிலும் ஜி வி பிரகாஷ் தனது தனித்துவத்தை நிருபித்திருக்கிறார். காத்தோடு காத்தானேன் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் பாடலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு வேகம் ஏற்றியிருக்கிறது. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் வலுவானதாக இல்லை.
ஜெயில் – சொல்ல வந்தது ஒன்று, சொல்லிவிட்டு சென்றது ஒன்று…