டேனி திரை விமர்சனம்

டேனி திரை விமர்சனம்

ஓடிடி தளம் தியேட்டரில் வெளியிட முடியாமல் வைத்திருக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரியபேருதவியாகஅமைந்திருக்கிறது.

அப்படி ZEE 5-ல் வெளியான டேனி படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒரு அலசல்

சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து இந்த டேனியைஇயக்குநர் ல.சி. சந்தானமூர்த்தி கொடுத்துள்ளார்.  கிராம விவசாய நிலத்தில் ஒரு பெண் எரித்துக் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அந்தப்பெண்ணின்  கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் துரை சுதாகர்.

அத்துடன் படம் முடியவில்லை. அதே காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் அந்த வழக்கைக் கையில் எடுக்கிறார். ஆனால், இப்போது வரலட்சுமியின்  தங்கையே அதேபோன்று எரித்துக் கொலைசெய்யப்பட, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸுடன் நகர்கிறது படம்.

வரலட்சுமி உதவியாக டேனி என்ற நாயும் இருக்கிறது. அதுவே படத்தின் தலைப்பு

அப்பா சரத்குமார் போலவே வரலட்சுமி சரத்குமாருக்கும் காவல்துறை ஆய்வாளராக காக்கிச்சட்டை கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. படபடப்பான பேச்சை கொஞ்சம் தவிர்த்து  இருக்கலாம் மிடுக்காகவும் மிரட்டலாகவும் இருக்கிறார். தங்கைக்காகத் துடிக்கையில் ஒரு சகோதரியின் பாசத்தை உணரவைக்கிறார்.

உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் துரை.சுதாகர் பொறுப்புக்ளைத் தட்டிக் கழிக்கும்  பலவீனமான பக்கத்தைக் இயல்பாக காண்பித்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு நன்றாக பொருந்துவதுடன் கிராமியமணத்துடன் அமைந்து கதைக் களத்துக்கும் பக்க பலமாக  இருக்கிறது. சிரிப்பதிலேயே பல உணர்ச்சிகளைக் காட்டும் அவருக்கு இன்னும் கூட வலுவான வேடங்கள் அமையசாத்தியம் இருக்கிறது.

டேனிக்கு இன்னும் வாய்ப்புஅளித்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், ஒப்புக்கு மோப்பம் பிடிப்பதை மட்டுமே காண்பிக்காமல் நாய்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பதவிகள் போன்று மக்களுக்கு தெறியாத சில விஷயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

டேனியை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அனிதா, வினோத் கிஷன், வேலராமமூர்த்தி ஆகியோர் மிகவும் நன்றாகவே அவர்களது வேலையை செய்து இருக்கிறார்கள்.

ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு, சாய் பாஸ்கரின் பின்னனி இசை படத்திற்கு பலம்.

கண்டிப்பில்லாத பணக்காரர்கள் கொடுக்கும் செல்லம் அவர்களின் பிள்ளைகளை எந்த அளவுக்குக் கொண்டு சென்று நிறுத்தும் என்பதை 1 மணி 35 நிமிடத்தில் கருத்தாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இப்பொழுது காலக்கட்டத்திற்கு ஏற்ற  டேனி.