நடிகர் திலகம் சிவாஜி வழியில் உருவாகும் அடுத்த வாரிசு தர்ஷன் !

நடிகர் திலகம் சிவாஜி வழியில் உருவாகும் அடுத்த வாரிசு தர்ஷன் !

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே ஆதர்ஷ நாயகனாக மாறியவர் சிவாஜி கணேசன். இன்றுவரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, அவரை முன்வைத்தே பாடமெடுக்கப்படுகிறது. அப்படியான நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திலிருந்து தன் தாத்தா வழியில் நடிப்பை கற்று திரையில் அறிமுகமாக காத்திருக்கிறார் தர்ஷன்.

நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் அவர்களின் இரண்டாவது மகன் தான் தர்ஷன். தர்ஷன் தன் தாத்தா போல் சிறுவயது முதலே, கலை ஆர்வம் அதிகம் உள்ள நபர். தன் தாத்தா மேல் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் தர்ஷன் நடிப்பை முறையாக் கற்று நடிப்பிற்காக முழுமையாக தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார்.

தனது கல்லூரி காலம் தொடங்கி, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மேடை நாடகங்களில் பங்காற்றிவருகிறார். டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா-வில் உள்ள பேராசிரியர்களின் கீழ் பயிற்சி பெற்றுவருகிறார்.

தர்ஷன் பல்வேறு விதமான நாடக முறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்ண்டுள்ளார். சபா நாடகம், தெருகூத்து, வீதி நாடக குழு, நாட்டுபுற நாடகம், தனி நடிப்பு மற்றும் சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தானே நாடக நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு வாரிசு நடிகரும் செய்யாத சாதனையாக தெருக்கூத்து, வீதி நாடக குழு ஆகியவற்றில் பணிபுரிந்து சாதனை படைத்திருக்கிறார் தர்ஷன்.

வாரணாசி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர் நடித்து, இயக்கிய “ராவி பார்” என்ற நாடகம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. தன் தாத்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தன்னை முழுதாக நடிப்பிற்கு ஒப்புக்கொடுத்து அதன் தாத்பர்யங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்திருக்கும் தர்ஷன் அடுத்ததாக திரை உலகில் நுழைய தயாராகி வருகிறார் . தர்ஷன் நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. நடிகர் திலகம் வீட்டிலிருந்து மற்றுமொரு பொக்கிஷம் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவுள்ளது.