*படத்தயாரிப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை ஊக்குவித்த மணி ரத்னம்*

*படத்தயாரிப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை ஊக்குவித்த மணி ரத்னம்*

இரு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான், 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு ஊக்கமளித்தது பிரபல இயக்குநர் மணி ரத்னம் என்பது பல பேருக்கு தெரியாத விஷயம்.

நீண்ட காலமாக இருவரும் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், படமெடுப்பதும் இசையமைப்பது போன்றது தான் என மணி ரத்னம் கற்றுத் தந்த பாடமே 99 சாங்ஸ் படத்தை எழுதவும், தயாரிக்கவும் ரஹ்மானுக்கு உந்துசக்தியாக அமைந்தது.

“திரைப்படம் எடுப்பது பாடலை உருவாக்குவது போன்றது தான் என்று மணி சார் ஒரு முறை என்னிடம் கூறினார். உதாரணமாக, பாடலை பற்றிய அறிமுகம், மையக்கரு, மெட்டு உங்களிடம் உள்ளது. பின்னர் நீங்கள் பின்னணி இசைக்கோர்ப்பையும் இதர பணிகளையும் செய்கிறீர்கள். இவ்வாறாக அழகான முறையில் பாடலுக்கான பயணம் நிறைவுறுகிறது. இதை அவர் என்னிடம் கூறிய போது தான், நமது சொந்த மொழியில் இன்னுமொரு கலை வடிவத்தை உருவாக்குவது எந்தளவு மனநிறைவை தரும் என்பது எனக்கு புரிந்தது,” என்று கூறுகிறார் ரஹ்மான்.

அவரது முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் திரைப்படத்தில் எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இசைக்கலைஞர்-இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இதை இயக்கியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்பட இருக்கும் இத்திரைப்படம், இசையை மையக்கருவாக கொண்ட உணர்ச்சிப்பூர்வமான காதல் கதை என்பதையும், மற்ற திரைப்படங்களை விட வித்தியாசமானதென்பதையும் ரஹ்மான் உணர்ந்திருக்கிறார். “திரைப்படத்தின் கதை எந்தளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்பதை வைத்தே ஒரு படத்துடனான அவர்களின் அனுபவம் அமைகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நமது ரசிப்புத்தன்மை மாறியிருக்கிறது. 99 சாங்ஸ் ஒரு பரீட்சார்த்தமான படம். காட்சிகளும், ஒலியமைப்புகளும் வித்தியாசமான அனுபவமாக அமையும்.”

2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 99 சாங்ஸ் வெளியாகிறது. ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

***