பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் ரஹ்மான்.!

பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் ரஹ்மான்.!
தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் இணைகிறார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம் மொழி படங்களில் பிசியாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மணிரத்னத்தின் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான ‘ கண்பத்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் டைகர் ஷெராப், ரஹ்மான், க்ரிதி சநோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
அமிதாப் நடித்த ‘ பிளாக் ‘ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட் பிரவேசம் செய்த விகாஸ் பால் அதன் பின் நிறைய படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியுள்ளார்.
மேலும் ‘குயின்’ , ‘சில்லார் பார்ட்டி’, ‘சூப்பர் 30’ போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மூன்று முறை தேசிய விருதும் மற்றும் பல விருதுகளும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பின் மத்தியில் தன் மகள் திருமணத்துக்காக சென்னை வந்த ரஹ்மான் தன் முதல் பாலிவுட் பிரவேசம் பற்றி இவ்வாறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“மூன்று மாத கால ஹிந்தி டூஷன் , ஸ்கிரிப்ட் ரீடிங், மேக்கப் டெஸ்ட் என்று நிறைய ஹோம் வொர்க் செய்த பின் தான் லண்டனில் படப்பிடிப்புக்கு சென்றேன்.பொதுவாகவே தென்னிந்திய நடிகர்- நடிகைகளை பாலிவுட் சினிமாக்காரர்கள் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள் என்று தான் கேள்வி பட்டிருக்கிறேன் . ஆனால் நான் கேள்வி பட்டதுக்கு மாறாக இருந்தது, அங்கு எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அனுபவங்கள். அவர்களது நேரம் தவறாமை , பிளானிங் , எனக்கு கிடைத்த உபசரிப்பு, வரவேற்பு, காட்டிய அன்பு எல்லாமே என்னை ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக பெரியவன் – சிறியவன் பாகு பாடில்லாமல் நடிகர் டைகர் ஷெராப் மற்றும் நடிகர்களும் இயக்குனரும் புரொடக்க்ஷன் பாய் லைட் மேன் போன்றோர்களிடம் நண்பர்கள் போல பழகுவது என்னை ஆச்சாரியப்படுத்திய புதிய அனுபவமாகும்.

டைகர் ஷெராப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் அது மிகையாகாது. எல்லோரிடமும் ஒன்று போல அன்புடனும் பாசத்துடன் பழகுபவர். இரண்டு நாள் அவருடன் பழகினாலே இவரை போல ஒரு மகன் நமக்கும் இருந்தால் என்று ஆசைப்படுவோம். பெரிய ஹீரோவாக இருந்தும் பழகுவதில் அவ்வளவு பணிவு.பழக்கதிலும் தொழிலிலும் மிகவும் அர்பணிப்பு மனமுடையவர். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

என்னுடன் நடித்த க்ரிதி சனோனும் பழகுவதற்கு மிக இனிமையானவர் . படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளிலேயே நீண்ட காலமாக மிகவும் பரிச்சயமானவரைபோல தான் என்னுடன் பழகினார். ஒவ்வொரு சீன் எடுக்கும் போதும் ” சார் அப்படி நடித்தால் நல்லா இருக்குமா, இந்த சீன்ல நம்ம இப்படி நடிக்கலாமா என்று அபிப்ராயம் கேட்பார் க்ரிதி.

சிறந்த எழுத்தாளரான இயக்குநர் விகாஸ் பால், தான் பெரிய இயக்குநர் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் அன்பாக பழகுவார். யாருடைய மனமும் நோகக்கூடாது என்ற மனபான்மையுடன் வேலை வாங்குவார். அவருடன் பழகினால் அவரை விட்டு பிரிய நமக்கு மனசு வராது. அவ்வளவு பாசக்காரர்”.
படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றியும் மற்றும் பல விஷயங்களை பின் கூறுகிறேன்” இவ்வாறு ரஹ்மான் கூறினார்.