ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் சிலர் மிக மிக அற்புதமாக படம் என்று பாராட்டி இருக்கிறார்கள். நேற்று (22.07.2019) இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசியதாவது,
“ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள். எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீங்கன்னு நம்புறேன். தொரட்டி என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப்படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர் தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர் எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது. இந்தப்படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவுசெய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்
நடிகர் அழகு பேசியதாவது
“1960-ல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். இந்தப்படம் அந்தக் காலகட்டத்தின் கிராமத்து வாழ்வை கண்முன் காட்டியது. இந்தக்கதையில் ஒரு லவ் இருக்கிறது. இயக்குநர் மாரிமுத்து கதை திரைக்கதை எழுதி அழகாக படத்தை உருவாக்கி விட்டார். அவரின் கதையை தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர். இப்படியான படத்தை தயாரிக்க முன் வந்தது பெருமையாக இருக்கிறது. இப்படத்தின் இசை மிக அருமையாக இருக்கிறது. சினேகன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை மண்வாசனை மாறாமல் எழுதி இருக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து நீங்க எத்தனையோ படம் நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்திற்காக உங்களுக்கும் ஒத்திகை பார்க்க வேண்டும் என்றார்கள். அது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது. இந்தப்பட டீம் இன்னும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. இந்தப்படத்தை Sdc பிக்சர்ஸ் வெளியிடுவது பெரிய மகிழ்ச்சி என்றார்”
தயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசியதாவது,
“எல்லோரும் வணக்கத்தில் ஆரம்பிப்பார்கள். நான் நன்றியில் துவங்குகிறேன். தொரட்டி பாடல்களுக்கு நீங்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்தீர்கள். தொரட்டி படம் பார்ப்பவர்களுக்கு இதமான பயணமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு அது சிரமமான பயணம். ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்டப் பொருள்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச்சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் உழைத்தோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்த்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும்.இந்தப்படத்தை பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போல இருக்கிறது என்றார்கள். இந்த வார்த்தை தான் நாங்கள் படத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது. நடிப்பிற்கான ட்ரைனிங் மட்டுமே ஆறுமாதம் எடுத்துக் கொண்டார்கள். இப்போது படம் எடுப்பதை விட எடுத்த படத்தை வெளியிடுவது தான் பெரிய போராட்டம். இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடும் SDC பிக்சர்ஸ்க்கு என் நன்றி” என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது,
“நிறைய பேர்களுக்கு தொரட்டிப் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படக்குழுவின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை. இந்தப்படம் தான் எனக்கு சேரன் அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம். ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? சென்னையை அண்ணாந்து பர்க்கக் கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன. மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம் கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது. இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம். இந்தப்படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன். நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் படைப்பாக மாற்ற வேண்டும் தொரட்டியைப் போல. ” என்றார்
கதாநாயகன் ஷமன் மித்ரு பேசியதாவது,
“விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்தவன் இந்தப்படத்தை இந்து கருணாகரன் சகோதரியோடு தயாரித்துள்ளேன். இப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். “துரோபதியை துகில் உரியும் போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். ஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். அப்போது தான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன் தான் இந்தப்படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி. இயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்..பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடிவரும். அந்தளவிற்கு என்னோடு பழகி விட்டது. நிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப்படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்.” என்றார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத ஒளிப்பதிவாளர் பொறுப்பை குமார் ஸ்ரீதர் ஏற்றுள்ளார். எடிட்டிங் ராஜாமுகமது.