*புளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ? ; திகைத்த சென்சார்*
*ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன்*
*“சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்” ; புளூ சட்டை மாறன்*
*“என் படம் வெளியாக கூடாது என அழுத்தம் கொடுத்தார்கள்” ; புளூ சட்டை மாறன்*
*புளூ சட்டை மாறன் படத்தை பார்க்க புதிய சென்சார் கமிட்டியை அமைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்*
*“புளூ சட்டை மாறனின் ருத்ர தாண்டவம் தான் ‘ஆன்டி இண்டியன் ; தயாரிப்பாளர் ஆதம்பாவா பெருமிதம்*
*“ஆன்டி இண்டியன் படத்தின் பிரச்சனைகளால் எனக்கு லாபம் தான்” ; தயாரிப்பாளர் ஆதம் பாவா மகிழ்ச்சி*
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே சமயம் இந்தப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு வெறும் மூன்று கரெக்சன்களுடன் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
எதனால் இந்த போராட்டம், இதற்கு பின்னால் யாரவது அழுத்தம் கொடுத்தார்களா என்பது குறித்து இயக்குனர் புளூ சட்டை மாறனும் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்கள்.
புளூ சட்டை மாறன் பேசும்போது, “சென்னையில் தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு பாராட்ட போகிறார்கள் என நினைத்தால், எந்தவித காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டனர். இதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்தோம். அதில் முக்கிய உறுப்பினராக உள்ள நடிகை கவுதமி சென்னையில் இந்தப்படத்தை பார்ப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பெங்களூரில் நாகபரணா என்பவர் தலைமையில் படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு படத்தில் 38 இடங்களில் கட் பண்ணவேண்டும் என்றும் அதற்கு ஒப்புக்கொண்டால் சான்றிதழ் தருகிறோம் என்றும் சொன்னார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட 38 இடங்களில் உள்ள வசனங்கள், காட்சிகளை வெட்டினால் கிட்டத்தட்ட 200 கட்டுகள் விழும். அந்தப்படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்தால் நிச்சயம் பிளாப் தான். தயாரிப்பாளரும் நானும் அதை விரும்பவில்லை.
அதனால் அடுத்த முயற்சியாக ட்ரிபியூனலில் முறையிடுவது என முடிவெடுத்தோம்.. ஆனால் எங்களது துரதிர்ஷ்டமோ என்னமோ, எங்கள் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில் தான் அத்தனை வருடங்களாக இயங்கிவந்த அந்த அமைப்பையே கலைத்து விட்டார்கள்.
இறுதியாக ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடினோம். எங்களது தரப்பு நியாயங்களை கேட்ட நீதிமன்றம், அதற்கு முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.. மேலும் புதிதாக ஒரு கமிட்டி ஒன்றை அமைக்க கூறிய நீதிமன்றம், முறையான கட்டுக்களுடன் கூடிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து படத்தை பார்த்த புதிய கமிட்டியினர் வெறும் மூன்றே இடங்களில் சிறிய கரெக்சன்களை மட்டுமே செய்யவேண்டும் என கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.
சென்சாரின் கெடுபிடிகள் காரணமாக தரமான படங்களை எடுப்பவர்கள் பயந்து பயந்து படம் எடுக்கவேண்டியுள்ளது அதற்காக சென்சாரே வேண்டாம் என்று சொல்லவில்லை.. இன்று சின்னப்பையன்கள் கூட கையில் கூட ஆண்ட்ராய்டு மொபைல் வைத்துக்கொண்டு கட்டுப்பாடின்றி பயன்படுத்துகின்றனர். அப்படி காலம் மாறிக்கொண்டே வரும் சூழ்நிலையில், அதற்கேற்ப சென்சாரின் விதிகளிலும் திருத்தம் கொண்டுவந்து அனைத்தையும் சட்டவரம்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்.
நாடே கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கின்ற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில் தான் இந்த ஆன்டி இந்தியன் என்கிற தலைப்பை வைத்துள்ளோம்.. ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால், ‘கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை’ என டைட்டில் வைக்கலாம் என்றும் முடிவு செய்து வைத்திருந்தோம்.
ஏற்கனவே சிலர் செய்த தவறுகளாலும், ஒருசிலர் இந்தப்படத்தை தவறாக புரிந்துகொண்டதாலும் ஒட்டுமொத்த சென்சார் அமைப்பை நாங்கள் குறைகூற விரும்பவில்லை. சென்சாரில் உள்ளவர்களே படத்தில் வரும் கதாபாத்திரங்களை நிஜத்தில் வாழும் மனிதர்களுடன் பொருத்தி பார்த்து கொள்கின்றனர். அதுதான் மிகப்பெரிய சிக்கலே..
இந்தப்படம் எடுப்பதற்காக எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை.. ஆனால் எனது படம் வெளிவரக்கூடாது என்று திரையுலகில் இருந்தே பலரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது என்கிற செய்தியையே மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்கள் பலர் உண்டு.
சினிமாவில் புதிதாக ஒரு விஷயம் வரும்போது எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும். இந்த ஆன்டி இந்தியன் படத்தை பார்க்கும்போது, படம் புதுசா இருக்குதே, என்னடா இவன் இப்படி போட்டு அடிச்சுருக்கான் என்கிற எண்ணம் ஏற்படும். ஆனால் படத்தின் முடிவில் நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள்.
முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனைகளா, தயாரிப்பாளரை படுகுழியில் தள்ளிவிட்டோமோ என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது. ஆனால் போராட்டத்தில் கிடைத்த வெற்றியால் இன்னும் தைரியமாக தரமான படங்களை எடுக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. எந்தப்படத்துடனும் போட்டி போட்டு, இந்தப்படத்தை தீபாவளிக்கு கூட வெளியிட முடியும்.. ஆனால் குறைவான தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்தப்படம் வெகுஜன மக்களுக்கு சென்று சேராமல் போய்விடும். அதேபோல ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்டு வந்தாலும் கூட, முதலில் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இந்தப்படத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். சில உதவி இயக்குனர்களிடம் பேசும்போது, நம் படத்திற்கு மிகப்பெரிய காசு செலவு செய்து அடுத்தவர்களை இசையமைக்க வைத்து ஏன் கெடுக்க வேண்டும்.. நாமே இசையமைத்து கெடுத்து விடுவோம் என விளையாட்டாக சொல்வேன். இது ஒன்றும் பெரிய மியூசிக்கல் படம் இல்லை. அதனால் நான் இசையமைத்தாலே போதும் என இசையமைப்பாளராகவும் மாறிவிட்டேன்.” என கூறினார்.
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “இந்தப்படத்தை எடுக்கும்போதே பின்னால் பெரிய பிரச்சனைகள் வரும் என தெரிந்தே தான் ஆரம்பித்தோம். இதுவரை சென்சார் அமைப்பினர் ஒவ்வொரு படத்திற்கும் ஏதோ ஒரு அடிப்படையில் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ஆன்டி இண்டியன் படத்தை பார்த்துவிட்டு இதற்கு எப்படி சான்றிதழ் கொடுப்பது என்றே அவர்களுக்கு புரியவில்லை. மாறன் இயக்கியுள்ள இந்தப்படம், வழக்கமாக அவர்கள் பார்க்கும் படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
ஆனால் சென்னை, பெங்களூர், மும்பை என மூன்று இடங்களிலும் படம் பார்த்த சென்சார் கமிட்டியினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றி வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டிருந்தாலும், பார்த்த அனைவருமே இந்த படத்தை பாராட்ட தவறவில்லை. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இந்தப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித நட்டமோ பாதிப்போ இல்லை. சொல்லப்போனால் லாபம் தான். இப்போதே பல பேர் இந்தப்படத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில் இந்த ஆன்டி இண்டியன் படம் அண்ணன் மாறனின் ருத்ர தாண்டவமாக இருக்கும்” என்றார்.