” பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” – விமர்சனம்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு வழியில் நல்லதாக இருந்தாலும், பல வழிகளில் பலருக்கும் அது ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது.
தற்போது உள்ள காலகட்டத்தில் கைபேசி எனும் கருவியை அனைவரும் கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த கைபேசி மூலம் பல நன்மைகள் நம்மை வந்து சேர்ந்தாலும் சில தீய சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
குறிப்பாக இளம் பெண்களை தவறாக சித்தரித்து அவர்களை மிரட்டி, பணம் பறிக்கும் ஒரு மோசமான கும்பல் சில ஆண்டுகளாக நாட்டில் உலாவிக் கொண்டு இருக்கிறது.
பெண்களை குறி வைத்து அவர்களின் கைபேசிக்குள் எப்படியெல்லாம் நுழைகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக தோலுரித்துள்ள திரைப்படம் தான் “பென் விலை 999 மட்டுமே” திரைப்படம்.
வரதாஜ் இயக்கத்தில் ராஜ்கமல், மது, ஷ்வேதா பாண்டி மற்றும் பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் “பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே”.
பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் குளிக்கும் போது, தனது ஆண் காதலனுடன் வெளியே சுற்றும் போது, அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” ஒன்றை பொருத்தி அவர்களின் அந்தரங்கங்களை வீடியோவாக எடுத்து வருகிறது ஒரு கும்பல்.
இப்படியாக எடுக்கப்படும் வீடியோவை அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி அந்த பெண்களிடம் பணம் பறிக்கிறது அந்த கும்பல்.
இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு சில பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த மர்ம கும்பலை வலைவீசி பிடிக்க விரைகிறது தமிழக காவல்துறை.
இந்த கும்பலிடம் நாயகி எப்படி சிக்கினார்.? நாயகன் ராஜ்கமல் என்ன செய்தார்.? தமிழக காவல்துறையின் நடவடிக்கை என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ராஜ்கமல், சின்னத்திரை நடிகர் என்றாலும் வெள்ளித்திரையில் அவ்வப்போது வந்து ஜொலித்துவிட்டுச் செல்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார்
நாயகி ஸ்வேதா பாண்டி, நடிப்பில் பெரிதான ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அக்கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
முதல் பாதியில் விறுவிறுப்பை ஏற்றிய இயக்குனர் வரதராஜ், இரண்டாம் பாதியில் சற்று தொய்வை ஏற்படுத்தி விட்டார். விழிப்புணர்வு படமாக எழ ஆரம்பித்த கதை, மெதுவாக நகர நகர காதல் காட்சிகளுக்குள் மூழ்கி போனது.
முதல் பாதியில் கொடுத்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால், இக்கால பெண்களுக்கான நல்லதொரு விழிப்புணர்வு படமாக நிச்சயம அமைந்திருக்கும்.
விவேக் சக்ரவர்த்தியின், இசை ஓகே தான். பாடல்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகனின் ஒளிப்பதிவு, சரியான வெளிச்சத்தில் சரியான காட்சிகளை மட்டும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
அதிலும், கொடைக்கானலில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது.
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – ஆண்ட்ராய்டு கால பெண்களுக்கான விழிப்புணர்வு படம் (பாடம்)