ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம்

ராஜா ஶ்ரீபத்மநாபன் இயக்கத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி முழுநீளத் திரைப்படம்

இந்திய சினிமாக்களில் சில திரைப்படங்களில் மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்பினையும் அதன் செயல்பாடுகளையும் பாராட்டி வசனங்களும், காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்வதுண்டு.
ஆனால், முதன்முறையாக முழுக்கமுழுக்க மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை மட்டுமே மையமாக வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாகிறது.
திரைப்படக்கல்லூரி மானவரான ராஜா ஶ்ரீபத்மநாபன் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரை சுற்று வட்டாரத்தில் நடக்கவிருக்கிறது.
நாட்டில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் நடந்து நெஞ்சை பதறவைக்கும் போதெல்லாம் நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து (SUOMATO) வழக்கை விசாரிப்பது நடக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும்போது இப்படி தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கை அதிகமாகக் காணமுடிகிறது. இது ஒருவகையில் நீதித்துறை, மனித உரிமைகள் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைகிறது.
அந்தவரிசையில், ஒரு பெண்ணுக்கு நேரும் மனித உரிமை மீறல் மீதான சுயமான விசாரணையைப் பின்புலமாகக் கொண்டதுதான் இத்திரைப்படமும். படத்தின், நாயகிக்கு நேரும் அவலத்தை தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம், நீதியை நிலைநாட்டி மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட பெண் முன்பும் மாண்புடன் உயர்ந்து நிற்பதைப் பற்றிய கதைதான் இது.
இத்திரைப்படத்தில் நாயகனாக ‘சாலையோரம்’ திரைப்படத்தில் நடித்த ராஜவர்மன் நாயகனாகவும், கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற மதுரையைச் சேர்ந்த அம்சரேகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ஷர்மிளி, சென்றாயன், வையாபுரி, வினோதினி, மீரா இன்னும் சில புது முகங்களும் நடிக்கின்றனர்.
ரஃகிட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வேலுச்சாமி இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளராக முத்துக்கோட்டீஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் திரைப்படக்கல்லூரி மானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு வாரென் vj சார்லி இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் சந்துரு எழுதுகிறார். கலை: சம்பத் திலக், தயாரிப்பு நிர்வாகம், செங்குட்டுவன். பிஆர்ஓ-வாக நிகில்முருகன் செயல்படுகிறார்.