கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும்,அண்டை வீட்டாரின் அன்புக்கும்,எதிர் வீட்டாரின் எச்சரிக்கைக்கும் கட்டுப்பட்டவர். தாய் சொல்லை மட்டுமல்ல அந்தக் குடும்பத்தின் அத்தனை பேரின் சொல்லுக்கும் கட்டுப்பட்டவர்.
அப்படியாகப்பட்ட உத்தம சீலரான சசிக்குமாருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்தநேரம் பார்த்து உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய வேலை அவருக்கு வருகிறது.
என்ன செய்வார்? இந்த வேலைதான் முக்கியம், திருமணம் பிறகுதான் என முடிவெடுக்கிறார். ஆனால், அம்முடிவைத் தைரியமாக வீட்டில் உள்ளோரிடம் சொல்ல முடியவில்லை. பாசம் அவரைத் தடுக்கிறது.
அதற்காக ஒரு திட்டம் போகிறார். அது என்ன அதன் விளைவுகள் என்ன அதன் விபரீதங்கள் என்ன அதனால் அவர் பட்ட கஷ்டங்கள் என்ன அதற்காக அவர் எத்தனை வில்லன்களை தனது திறமையால் எப்படி பந்தாடினார்… என்பதுதான் மீதிப் படம்.
தொடர்ந்து கிராமத்து கேரக்டர்களிலேயே வருவதால் சசிகுமாரின் தோற்றத்தில் மாற்றம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதாவது கிராமத்துக்காரராக இருந்தாலும் ஐ.டி.ஊழியராக காட்ட முயற்சி செய்து இருக்கிறார்கள் எடுபடவில்லை
நிக்கிகல்ராணி வழக்கம்போல் வந்து போகிறார்
சதீஷ், தம்பிராமய்யா, யோகிபாபு ஆகியோரை நேர்ந்துவிட்டிருக்கிறார்கள். கோபம் வருமளவுக்கு இருக்கிறது இவர்களது காமெடி
விஜயகுமார் சுமித்ரா தம்பதிகளின் தலைமையில் பெரிய கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வசனம், ஆளுக்கு ஒரு காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர்
இவர்கள் போதாதென ராதாரவி தலைமையில் ஒரு குடும்பம். அவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து போகிறார்கள். இவர்கள் எதற்காக வருகிறார்கள்..எதற்காக போகிறார்கள் என்று யாராவது தயவு செய்து கண்டுபிடித்துச்சொல்லுங்கள்
படத்தின் ஆறுதலான அம்சம் சித்தார்த்தின் ஒளிப்பதிவு. கிராமத்தைக் காட்சிப்படுத்துவதில் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறார்.
இசை சாம் சிஎஸ் எதுவும் சொல்வதற்கில்லை
சிக்கலை கூட்டுக்குடும்பம் என்னும் பெட்டி யில் அடக்க முயற்சித்த வகையில் அறிமுக இயக்குநர் கதிர்வேலுவை எப்படிப் பாராட்டுவதென்றே புரியவில்லை.