சமுத்திரக்கனி, இனியா, திலிபன், நடிப்பில் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருந்த ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது “ரைட்டர்”. “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
திருச்சியில் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரியும் சமுத்திரகனி இன்னும் சில வருடங்களில் ரிட்டையர்ட் ஆக இருக்கிறார். யார் மீதும் கோபப்படாமல் ரைட்டர் பணியை மட்டுமே சீறும் சிறப்புமாக செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்காக தனியாக யூனியன் ஒன்று வேண்டும் என்று பல வருடமாக சட்ட போராட்டம் செய்து வருகிறார் சமுத்திரக்கனி.
இந்த யூனியன் பிரச்சனையின் காரணமாக மேலிடத்திலிருந்து அதிகப்படியான அழுத்தம் வர, சமுத்திரக்கனியை சென்னைக்கு பணி மாறுதல் செய்து விடுகின்றனர்.
அங்கு, கல்லூரியில் படித்து வரும் மாணவன் ஹரி கிருஷ்ணனை போலீஸார் கைது செய்து லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். உயரதிகாரி (DC) இந்த மாணவன் வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஹரிகிருஷ்ணன் மீது போலீஸார் பொய்யான வழக்கை தொடுக்க ஆயத்தமாகும் வேளையில், எதேச்சயாக சமுத்திரக்கனி கொடுத்த ப்ளானில் மாணவன் வசமாக வழக்கில் சிக்கிக் கொள்கிறார்.
போலீஸ் உயர் அதிகாரி (DC), மாணவன் ஹரி கிருஷ்ணனை, டார்கெட் செய்ய என்ன காரணம்.? சமுத்திரக்கனி ஹரி கிருஷ்ணனை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை….
கதையின் முக்கிய தூணாக அசராமல் நிற்கிறார் சமுத்திரக்கனி. ஒரு முதிர்வயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே சமுத்திரக்கனியை வெகுவாக பாராட்டலாம். சமுத்திரனியிடம் குறைவான வசனங்கள் கொடுக்கப்பட்டு நிறைவான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப்
திருமண மண்டபத்தில் ஹரிகிருஷ்ணனை பிடிக்கும் காட்சியாக இருக்கட்டும், ரவுடிகள் துரத்தும் நேரத்தில் அவர்களை அடிக்கும் காட்சியாக இருக்கட்டும் இரண்டிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஸ்டேஷனில் சமுத்திரக்கனி அடிவாங்கும் காட்சியில் பார்க்கும் அனைவரின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் சமுத்திரக்கனி இப்படத்தின் நாயகனாகவும் ஒரு போராட்டத்தின் தலைவனாகவும் உயர்ந்து நின்றத்தை பார்க்க முடிந்தது,.
ஹரி கிருஷ்ணன், கதாபாத்திரமாகவே வாழ்ந்து நின்றிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் உயிருக்காக அழும் காட்சி அனைவரையும் இதயத்தை கனமாக்கியது.
இரண்டாம் பாதியில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இனியா போலீஸ் அதிகாரியின் வாகனத்திற்கு முன் குதிரையில் நிற்கும் காட்சியில் தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறார்
வக்கீலாக வந்த ஜிஎம் சுந்தர், தனது கதாபாத்திரத்தை ரொம்ப எளிமையாக செய்து முடித்துவிட்டு சென்றிருக்கிறார். சார்பட்டா பரம்பரையில் பார்த்த அதே என்ர்ஜியோடு..
எடுத்த கதைக்காக இயக்குனருக்கு மிக பெரிய பாராட்டு. தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை தரும் நீலம் ப்ரொடக்ஷனில் இருந்து மற்றொரு மைல் கல்
காவலர்களின் மன அழுத்தம், அதே நேரத்தில் காவல்துறையில் நடக்கும் சாதி அவலம் இரண்டையும் ஒரு சேர கையில் எடுத்து அதை நேர்த்தியாக மண் மணம் மாறாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர் ப்ராங்க்ளின்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கைதட்ட வைக்கின்றன.. கதையோடு பயணம் செய்து நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றதில் இசைக்கு மிகப்பெரும் பங்கு…
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். ஹரிகிருஷ்ணன் காட்சி முதல் இனியாவின் குதிரைக் காட்சி வரை அனைத்து காட்சிகளிலும் ஒளிப்பதிவு அசர வைத்துள்ளன.
மணிகண்டன் சிவக்குமாரின் படத்தொகுப்பு தேவையானதை தேவையான இடத்தில் வைத்து சேர்த்து “ரைட்டரை”ரைட்டாக கொடுத்திருக்கிறார்.
ரைட்டர் – தமிழ் சினிமாவிற்கு மிக மிக மிக…… முக்கியமான பெரிய ரைட்