லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !
நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.
லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் கூறியதாவது…
தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ( டாக்டர் & அயலான் ) 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தை பெற்ற படங்கள் என்பதில் எந்த் சந்தேகமுமில்லை. அப்படங்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை அழைத்து வரும். ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த உயரத்திற்கு உயர்த்திற்கொள்ள, உழைக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு அபாரமானது. “டான்” எங்கள் இருவருக்கும் மிக முக்கியமானதொரு படமாக இருக்கும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் கதையை கூறியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கதையில் பல காட்சிகளில் நகைச்சுவை மிளிர்ந்ததை உணர்ந்தேன். இப்படத்தில் ரசிகர்கள் 100 சதவீதம் உற்சாகமான காமெடி கலாட்டாவான அனுபவத்தை பெற்று மகிழ்வார்கள் என்பது உறுதி. அனிருத் அவர்களின் இசை படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பலம். சிவகார்த்திகேயனுடனான அவரது கூட்டணி, இதுவரை பிரமாண்ட வெற்றியினை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு அற்புதமான ஆல்பத்தை கேட்க ஆவலாக உள்ளேன்.
இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனை பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.