20 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும், இயக்குநர் விஜய் மில்டனின் “கொலுசுகள் பேசக்கூடும்” காதல் கவிதை தொகுப்பு ! இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் வெளியிடுகிறார்.
——————-
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவு துறையில் அறிமுகமாகி, தனிமுத்திரை பதித்து வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். இயக்குநராக கோலி சோடா, கடுகு என தரமான படங்கள் தந்து, சிறந்த இயக்குநர்களின் வரிசையிலும் இடம்பெற்றிருக்கிறார். இப்பொழுது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
இவர் எழுதிய “கொலுசுகள் பேசக்கூடும்” எனும் காதல் கவிதைகள் அடங்கிய தொகுப்பு, 20 வருடங்களுக்கு பிறகு Anklets do speak of love என கிரிஷ் வேணுகோபால் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இந்த ஆங்கில மொழியாக்க கவிதை தொகுப்பை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிடுகிறார்.
இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது…
2000 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் தான் “கொலுசுகள் பேசக்கூடும்”. 1998 – க்கு முன்பிருந்தே அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளை, அண்ணன் அறிவுமதி வாசிப்பார். அவருக்கு பிடித்துப்போய் ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தார். ஆனந்த விகடனில் ஒரு புத்தகம் முழுதும் அங்கங்கே எனது கவிதைகள் வெளியானது. பின்னர் அதனை முழுப்புத்தகமாக்கியபின், 2000 பிப்ரவரி 14 அன்று கவிக்கோ அப்துல் ரகுமான் புத்தகத்தினை வெளியிட்டார். அதன் பின் பல பதிப்புகள் வெளியிடப்பட்டு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் துபாயில் RJ வாக வேலை பார்க்கும் கிரிஷ் வேணுகோபால் இந்த புத்தகத்தை படித்துவிட்டு, என்னை தொடர்பு கொண்டார். அவர் ஒரு எழுத்தாளரும் கூட, இந்த புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆசைப்பட்டு என்னை அணுகினார். அவரின் அன்புக்காக சம்மதித்தேன். அவரது சொந்த முயற்சியில் இபுத்தகத்தை மிக அருமையாக ஆங்கிலதில் மொழிபெயர்த்துள்ளார். தற்போது அவரது முயற்சியில் ஆங்கில புத்தகமாக வருகிறது. 20 வருடங்கள் ஆகியும் ஒரு படைப்பு வாசிக்கப்படுவதும், இத்தனை தூரம் பாரட்டப்படுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இப்புத்தகத்தை வெளியிட மிக சரியான நபர் யாரென தேடியபோது, நண்பர் கௌதம் மேனன் ஞாபகத்துக்கு வந்தார். அவரும் அன்புடன் ஒப்புக்கொண்டார். தமிழ் பதிப்பு வெளியான அதே காதலர் தினத்தில் ஆங்கில பதிப்பும் வெளியாவது மேலும் மகிழ்ச்சி.
La liberta நிறுவனம் இப்புத்தகத்தின் அச்சுப்பிரதியை தயாரித்து வெளியிடுகிறார்கள். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா 14 பிப்ரவரி 2021 அன்று காலை 9.30 லிருந்து 10 மணிக்குள் நடைபெறுகிறது. ரசிகர்கள் அனைவரும் இவ்விழாவினை Facebook நேரலையில் கண்டுகளிக்கலாம்.