800 விமர்சனம்

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த
முத்தையா முரளிதரனின் சிறு வயது முதலே அவரது வாழ்க்கை படத்தில் சொல்லப்படுகிறது.கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்குச் சென்றது தொடங்கி பள்ளி, கல்லூரியில் முத்தையா சாதித்தது, இங்கிலாந்தில் அறிமுகமான தொடரில் அதிருப்தி அளித்தது என்று தொடர்ந்து உலகக் கோப்பை வெற்றி, சட்டவிரோதமாக பந்தை வீசுவதாக எழுந்த சர்ச்சை என்று போகிறது கதை.அவர் ஆரம்பத்தில் இருந்தே ஜெயித்து விடவில்லை. மாறாக அவரது முதலாவது இங்கிலாந்து டூரில் இலங்கை தோல்வி அடைந்து அவர் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுத் திரும்பி வருகிறார்.
இனி அவர் வாழ்க்கையில் கிரிக்கெட் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்து அவரது தந்தை பார்த்து வந்த பிஸ்கட் கம்பெனியில் தொழில்நுட்ப புதுமைகளைப் புகுத்த அது சம்பந்தமான கல்வி பயில வெளிநாடு போகச் சொல்லுகிறார்கள்.
அந்த மாதிரி நேரத்தில் இலங்கை அணியில் சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதால் அவருக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. அங்கேயும் சாதித்தாரா என்றால் இல்லை. அத்துடன் அவர் பந்து வீசும் முறை எறிவது போல இருப்பதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்ட, உடனே சர்வதேச கிரிக்கெட் கிளப்பின் சோதனைக்கு உட்படுத்தபடுகிறார்.அங்கே அவரது பந்து வீச்சு சரியாக இருப்பதாக அறிவிக்கப் படுகிறது. இல்லையென்றால் அவரது சகாப்தம் அன்றே முடிந்திருக்கும்.
500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய போதும் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்க, தன்னை நிரூபிக்க அவர் இரும்புத் தகட்டைக் கையில் அணிந்து பந்து வீசி ஆய்வுக்கு உள்ளாக, அதனால் கை மூட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வருகிறது.
இப்படியே தொடர்ந்து சோதனைகள் வந்தும் ஆயிரம் விக்கெட் எடுக்கக் கூடிய ஆற்றலும், சாத்தியமும் இருந்தும் 800 விக்கெட்டோடு நிறுத்திக் கொள்கிறார் அவர்.
அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்துதான் படமே தொடங்குகிறது. முத்தையா முரளிதரனை சிறு வயதில் இருந்து கவனித்து வரும் பத்திரிகையாளர் நாசர் அவர் தான் கதையை விவரிக்கிறார்.
முன்பாதிக் கதை முழுவதும் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பதுடன் முடிய, பின் பாதிக் கதையில்தான் அவர் எடுத்த மொத்த விக்கெட்டுகளும் காட்டப்படுகின்றன.
இலங்கையில் தமிழராக பிறந்ததால் அதில் ஏற்படும் நெருக்கடி, ஆயுதப் போராட்டத்தை நம்பாமல் அமைதியை விரும்பியதால் தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி, இயற்கையாக வளைந்த கையுடன் இருந்ததால் விளையாட்டில் ஏற்பட்ட நெருக்கடி என்று அவரது இன்னல்கள் யாவும் படத்தில் சரியாகக் காட்டப்பட்டு இருக்கின்றன.
ஈழப் போராளிகளின் தலைவராக நடித்திருக்கும் நரேன் அவர்களை முத்தையா முரளிதரன் சந்திப்பதைக் காட்டும் காட்சி முக்கியமானது.
தமிழரான முரளிதரன் வாழ்க்கையையும் நியாயப்படுத்த வேண்டும், ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் தவறாக சித்தரித்து விடக்கூடாது என்கிற ஏகப்பட்ட மெனக்கெடல் இந்தப் பட இயக்குனர் ஸ்ரீபதிக்கும் இருந்திருப்பது புரிகிறது.
முரளிதரனாக நடித்திருக்கும் மதுர் மிட்டலை பாராட்டியே ஆக வேண்டும்.
முரளிதரனின் தந்தையாக வேல ராமமூர்த்தியும், மனைவியாக மஹிமா நம்பியாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பலம்.
ஜிப்ரானின் இசையும் படத்திற்கு உயிர் ஊட்டி உள்ளது.
800 உண்மையான உணர்வு.