மூன்றாம் மனிதன் விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரிஷிகாந்த் கொல்லப்பட அதை புலன் விசாரணை செய்ய வருகிறார் பாக்யராஜ்.அதில் சில உண்மைகள் வெளியாகிறது.
இயக்குனர் ராம்தேவ் ஒரு குடிகாரர். குடிகாரனுடன் மனம் ஒத்துப்போக முடியாத மனைவி பிரணா தனக்கு ஒரு மகன் இருப்பதால் வீட்டுவேலை செய்து அவனைப் படிக்க வைக்கிறார்.
அவர் வீட்டு வேலை செய்யும் வீட்டில் ரிஷிகாந்தும், சோனியா அகர்வாலும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரிஷிகாந்துக்கும் சோனியாவுக்கும் ஈகோ பிரச்சினையில் மன ஒற்றுமை இல்லாமல் போக சோனியா அவரது நண்பரின் உதவியை நாடுகிறார். சோனியாவின் மீது ஒரு கண் வைக்கும் அவரோ பாலியல் வன்முறைக்கு சோனியாவை உட்படுத்துகிறார்.
பாக்யராஜ் விசாரணை மேற்கொள்ளும் போது தாங்களே கொலையாளி என்று இரண்டு சிறுவர்கள் ஒத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் மேல் அன்பு வைத்து அவர்கள் கொலையாளி இல்லை என்று கண்டுபிடிக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
சோனியா அகர்வாலுக்கு சிறிய வேடம் என்றாலும் அந்த வேடத்தை அவர் அழகாக ஏற்று நடித்து இருக்கிறார். இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் நன்றாகவே தனது பணியை செய்து இருக்கிறார்.
குடிகாரராக வரும் இயக்குனர் ராம்தேவ் தனக்காகவே சில காட்சிகளை அமைத்து அதற்கேற்ப தத்ரூபமாக நடித்துள்ளார்.
படத்தின் முக்கால் வாசி கதை பிரணாவின் மீதே நகர்வதால் அவர் அதனை லாவகமாக ஏற்று தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அந்த சிறுவர்கள் மனதை நெகிழ வைக்கிறார்கள்.
மணிவண்ணனன் அவர்களின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு வெகுவாகவே உதவி இருக்கிறது.
வேணு சங்கர் தேவ்ஜியின் இசையில் பாடல்கள் அனைத்தையும் இயக்குனர் ராம்தேவே எழுதி இருக்கிறார்.கேட்கும் விதத்தில் நன்றாக இருக்கின்றன.
பின்னணி இசை அம்ரீஷ் சிறப்பாக அமைந்துள்ளது.
மூன்றாவது மனிதன் க்ரைம் த்ரில்லர் நிறைந்த குடும்ப கதை.