*நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகளை கொண்டாடிய ரெயின்ட்ராப்ஸ்*
சென்னை: மனிதநேய சேவையிலும் சமூக மாற்றத்திலும் தனது 15 ஆண்டுகால சிறப்பான பயணத்தை நிறைவு செய்துள்ள ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு, தனது 15ஆம் ஆண்டு விழாவை “நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற சிறப்புத் தலைப்பில் விமரிசையாகக் கொண்டாடியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் பயணத்தில் தொடர்ந்து பங்காற்றி வரும் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பயனாளிகள் மற்றும் நல விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
*விழாவின் முக்கிய நிகழ்வாக, ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் 15 ஆண்டுகால பயணம், முக்கியமான சமூக நலத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் அதன் மூலம் பயனடைந்த ஏராளமான மக்களின் வாழ்க்கைப் பயணங்களை பதிவு செய்யும் “நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள் ” என்ற சிறப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் வெளியிட, அதன் முதல் பிரதிகளை வேலம்மாள் கல்வி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் சுதா ராமன், இ.வ.ப ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.*
இந்த விழாவில் விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குனர் விஜிபி ராஜதாஸ், இயற்கை வேளாண் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், டாக்டர் டி.வி. தேவராஜன், ஊடக ஆளுமை ரமேஷ் பிரபா, தொழிலதிபர்கள் பிரித்வி பாலன் மற்றும் பூபேஷ் நாகராஜன், ஆனந்தம் பாகீரதி ராமமூர்த்தி, விளக்குக்கடை ராஜலட்சுமி சிவசங்கரன், மாற்றம் சுஜித் குமார், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள், புரவலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நல விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ்-யின் நல்லெண்ணத் நல்லெண்ணத் தூதரான ஏ. ஆர். ரஹைனா விழாவிற்குத் தலைமை வகித்தார். ரெயின்ட்ராப்ஸ்-யின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் 15 ஆண்டுகால மனிதநேயப் பணிகளையும் சமூக மாற்றத்திற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் ரஹைனா பாராட்டினார்.
*பயனாளிகளின் சிறப்பு ராம்ப் வாக்*
விழாவின் மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக, ரெயின்ட்ராப்ஸ்-யின் பல்வேறு முக்கிய சமூகநலத் திட்டங்களின் பயனாளிகள் பங்கேற்ற சிறப்பு ராம்ப் வாக் நடைபெற்றது.
தன்னம்பிக்கையுடனும் பெருமையுடனும் மேடையில் நடைபோட்ட பயனாளிகள், அந்த ராம்ப் வாக்-ஐ வெறும் ஒரு நிகழ்ச்சியாக அல்லாமல், கண்ணியம், உள்ளடக்கம், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றின் கொண்டாட்டமாக மாற்றினர்.
ஒவ்வொரு மனிதருக்கும் தங்களை வெளிப்படுத்தவும், தங்களது திறமைகளை வெளிக்கொணரவும், சமூகத்தின் முன் கௌரவத்துடன் நிற்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ரெயின்ட்ராப்ஸ்-யின் நம்பிக்கையை இந்த நிகழ்வு அழுத்தமாக எடுத்துக்காட்டியது.
*ரெயின்ட்ராப்ஸ் அன்பகம் – மூத்த குடிமக்களுக்கான இலவச இல்லம்*
ரெயின்ட்ராப்ஸ்-யின் அடுத்த கட்ட மனிதநேயப் பயணத்தின் முக்கிய அறிவிப்பாக, “ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்” – சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச இல்லம் என்ற புதிய திட்டத்தினை விழாவில் அறிவிக்கப்பட்டது.
ரெயின்ட்ராப்ஸ் அன்பகம், குறிப்பாக ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட, தனிமையில் வாழும் மற்றும் பராமரிப்பு மற்றும் அன்பு தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் அன்பான இல்லத்தையும் பகல்நேர பராமரிப்பு வசதியையும் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட உள்ளது. இது வெறும் தங்குமிடமாக மட்டுமல்லாமல், மூத்த குடிமக்களுக்கு அன்பான பராமரிப்பு, சத்தான உணவு, மருத்துவ உதவி, உணர்வுப்பூர்வமான துணை, பொழுதுபோக்கு மற்றும் சமூக இணைப்பு உள்ளிட்ட முழுமையான ஆதரவை வழங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. அவர்களின் வாழ்வின் முதுமைப் பருவம் தனிமையிலும் ஆதரவின்றியும் அமையாமல், கண்ணியத்துடனும் அன்புடனும் பாதுகாப்புடனும் வாழும் ஒரு இடமாக ரெயின்ட்ராப்ஸ் அன்பகம் அமைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
