
போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம்
போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் : பிரவீன் , அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் நடிப்பில் வெளியான படம் போத்தனூர் தபால் நிலையம்.
இயக்குனர்-நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தவர்.
போத்தனூர் தபால் நிலையம் – இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘தபால் நிலையங்களில் நடக்கும் கொள்ளை’ பற்றியதுதான் கதை.
ஏற்கனவே மூன்று பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மட்டும் தற்போது ரிலீசாகியிருக்கிறது.
படத்தின் நாயகன் பிரவீன் படத்தை இயக்கியிருக்கிறார். இவரின் தந்தை அஞ்சலகத்தில் காசாளராக இருந்தவர். அப்பாவின் அனுபவத்தை வைத்து போத்தனூர் தபால் நிலையம் உருவானதாக கூறியுள்ளார்
Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மே 27, 2022 முதல் ஆஹா தமிழ் OTT யில் திரையிடப்படுகிறது போத்தனூர் தபால் நிலையம்.
1970-1980-1990 களில் நடக்கிற கதை.
பிரவீன் & அஞ்சலி ராவ் & வெங்கட் சுந்தர் ஆகிய மூவரும் சிறுவயது முதலே ஸ்கூல் ப்ரெண்ட்ஸ். அங்கு படிக்கும் ஒரு பணக்கார மாணவனை பார்த்து நாமும் வளர்ந்து பெரியவனாகி பெரிய பணக்காரன் ஆக ஆசைப்படுகின்றனர்.
எனவே இளைஞனாகி கம்ப்யூட்டர் பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார் பிரவீன். ஆனால் பேங்க் லோன் கிடைக்காமல் போய் விடுகிறது.
பிரவீன் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் ஒரு நேர்மையான போஸ்ட் மாஸ்டர். ஒரு நாள் சனிக்கிழமையன்று… போஸ்ட் ஆபீசில் மக்களின் சேமிப்பு பணத்தை பேங்கில் டெபாசிட் செய்ய தாமதம் ஆகிவிட்டதால் வீட்டுற்கு கொண்டு வருகிறார்.
வரும் வழியில் அந்த பணத்தை ஒருவன் திட்டமிட்டு கொள்ளையடிக்கிறான். இது வெளி உலகுக்கு தெரிந்தால் அப்பா ஜெயிலுக்கு போக நேரிடும்.
எனவே ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை-க்குள் கொள்ளையனை தேடி அலைகின்றனர் பிரவினும் நண்பர்களும். இறுதியில் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.
படத்தின் இயக்குனர் பிரவீனே நாயகன் என்பதாலும் இவரே கலை இயக்குனர் என்பதாலும் படத்தை செதுக்கியிருக்கிறார். யதார்த்த நடிகராகவும் சிறந்த கலை இயக்குனராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
அஞ்சலி கண்களாலேயே பேசி நடித்துள்ளார்.
நாயகி அஞ்சலி ராவ் தவிர அனைவரும் புதுமுகங்களே. படத்தின் அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கும். அப்படி வேலை வாங்கியிருக்கிறார். இவர்கள் அனைவரும் கோவையை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்கள்.
படத்தின் சவுண்ட் இன்ஜினியர் பற்றி சொல்லியாக வேண்டும். 1980-90 களுக்கு ஏற்ப அழகாக காட்சிகளை உணர்ந்து ரசித்து சவுண்ட் கொடுத்துள்ளார் அருண்காந்த்.
தென்மா இசையமைக்க சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இருவருமே படத்திற்கு உயிரூட்டி உள்ளனர்.
அந்த காலத்தில் ரேடியோ வைத்துக் கொள்ள கூட லைசென்ஸ் தேவை என்பதையும் சொல்லி உள்ளனர். அதேபோல் Post office saving scheme பற்றி விளக்கியுள்ளனர்.
படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் வேகமாக செல்கிறது. இயக்குனர்பிரவீனுக்கு பாராட்டு கள்.
படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்த்து ரசித்துக் கொள்ளவும். போத்தனூர் தபால் நிலையம்…. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.!
