ஆகக்கடவன விமர்சனம்

முழுக்க முழுக்க ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் ஆகக்கடவன வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும் ஒரு இளைஞனை காரில் கடத்துகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இணைபிரியாத மூன்று நண்பர்களான ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஒரு மெடிக்கல் ஷாப் ஒன்றில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால் மெடிக்கல் ஷாப்பை விற்க முடிவெடுக்க அதை நண்பர்கள் மூவரும் வாங்கிக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதற்காக ரூபாய6 லட்சம் கேட்கிறார் அந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர். மூன்று நண்பர்களும் எப்படியோ இந்த மெடிக்கல் ஷாப்பை வாங்க பணத்தை தயார் செய்கிறார்கள். ஆனால், இந்த பணம் திருடுப்போய்விடுகிறது. இந்த நிலையில், ஊருக்குச் சென்று சொத்தை விற்று பணத்தை தயார் செய்ய முடிவெடுக்கிறார் ஆதிரன் சுரேஷ். அவருடன் பைக்கில் துணையாகச் செல்கிறார் சி.ஆர்.ராகுல். பயணத்தின் போது அவர்களது பைக் பஞ்சராகிறது. பஞ்சர் போட காட்டுப் பகுதியில் இருக்கும் பஞ்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கே, ஒரு இளைஞனை காரில் கடத்திய வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் அங்கு இருக்கிறார்கள். சிறுவன் ஒருவன் பஞ்சர் போடும் வேலையை செய்து கொண்டு இருக்கிறான். பஞ்சர் போட வந்தவர்க்கும் இந்த கடத்தல் கும்பலுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. நண்பர்கள் இருவரும் தொடர்ச்சியாக பிரச்னையில் அவர்களே அறியாமல் ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள். வெறும் தற்செயல் நிகழ்வுகள் என்று தோன்றுவது உண்மையில் தங்களை சிக்க வைக்க திட்டமிடப்பட்ட சதி திட்டங்கள் என்பதை அவர்கள் விரைவில் உணரத் தொடங்குகிறார்கள். மேலும் அங்கே சில மர்மமான திகில் சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்னும் ஒரு நண்பரான ராஜசிவனும் அங்கு வந்து இந்த கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். அதன்பிறகு நண்பர்கள் மூவருக்கும், கடத்தல் கும்பலுக்கும் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை. நண்பர்களாக நடித்திருக்கும் ஆதிரன் சுரேஷ், சி.ஆர். ராகுல், ராஜசிவன் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களான நடித்திருக்கும் வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ், பஞ்சர் கடை சிறுவனாக தக்ஷன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை அறிந்து சிறப்பான நடிப்பை மிகவும் சிறந்த முறையில் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் லியோ வெ ராஜா அவர்களின் ஒளிப்பதிவும்,
சாந்தன் அன்பழகன் அவர்களின் இசையும் படத்திற்கு பெரிய பலம். சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இவர்களின் படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்துள்ளது. கதையை ஒரு புதிய கோணத்தில் களம் அமைத்து சுவாரஸ்யமான உச்சக்கட்ட திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமான காட்சிபடுத்தி இருக்கும் அறிமுக இயக்குநர் தர்மா அவர்களுக்கு பாராட்டுகள்.

ஆகக்கடவன புது கதைக்களம் புதுவிதமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.