நாயகன் கிஷன் தாஸ் பள்ளி பருவத்திலிருந்தே கௌதம் வாசுதேவ மேனனின் படங்களை பார்த்து தீவிர ரசிகனாக காதல் மீது ஈடுபாடு கொண்டவன்.எல்ஐசி ஏஜெண்ட் தந்தை பாண்டியன்,தாய் துளசியுடன் வசிக்கிறார். பள்ளியில் படிப்பதை விட்டு விட்டு சக மாணவியிடம் காதல் கொள்ள அந்த மாணவி நண்பனாக பார்க்க அதன் பின் கல்லூரியிலும் காதல் தோல்வி ஏற்பட்டு இவரது பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று விடுகிறது.இதனால் பெற்றோர் டென்ஷனாகி ஏதாவது உருப்படியாக வேலை பார்க்க சொல்கின்றனர்.அதன் பின் தந்தையின் சிபாரிசின் பேரில் மேரேஜ் மேட்ரிமோனியில் வேண்டா வெறுப்பாக வேலைக்கு சேருகிறார்.அங்கே கண்டிப்பு மிகுந்த டீம் லீடர் ஷிவாத்மிகாவை சந்திக்கிறார். பல நேரங்களில் ஷிவாத்மிகாவால் அவமானப்பட்டாலும் வேறு வழியில்லாமல் வேலையை தொடர்கிறார். அங்கே திருமண ஜோடிகளை தேர்ந்தெடுக்கும் முறை அவர்களின் தகுதி, வசதி,வேலை வைத்தே நிர்ணயிக்கப்படுவதும்,அதிகமான ஜோடிகளை சேர்த்து வைப்பதில் போட்டியே நடக்கிறது. இதற்கு நேர்மாறாக கிஷன் தாஸ் பல புதிய ஐடியாக்களை பொருத்தி மனப்பொருத்தத்துடன் திருமணங்களை முடித்து நல்ல பெயர் சம்பாதிக்கிறார். இதனிடையே ஷிவாத்மிகாவின் மேல் காதலும் மலர்கிறது.இந்நிலையில் பணக்காரர் ஒருவர் ஒரே மாதத்தில் தன் மகளுக்கு வரனை தேடி முடிக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடுகிறார். இந்த பணக்காரர் வீட்டிற்கு செல்லும் கிஷன் தாஸ் ஷிவாத்மிகா அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் போது,கிஷன் தாஸ் அந்த பணக்காரரின் மகளை சந்திக்க நேரிடுகிறது அவள் காதலிப்பதாகவும்,தன்னை காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறாள்.அதனால் கிஷன் தாஸ் ஷிவாத்மிகாவுக்கு தெரியாமல் காதலனின் பயோடேட்டாவை தயார் செய்து கொடுத்து பணக்காரரிடம் ஓகே வாங்க முயல்கிறார். இதனை அறிந்து கொள்ளும் ஷிவாத்மிகா அந்த வரனை தடுத்து கிஷன் தாஸை எச்சரித்து வேலையை விட்டு போகச் சொல்கிறார்.அப்பொழுது நெடு நாளாக வரன் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் 55 வயதான விடிவி கணேஷீக்கு பொய் சொல்லாமல் பெண் பார்த்து முடித்தால் வேலையை விட்டுச் செல்கிறேன் என்று கிஷன் தாஸ் சொல்ல, இதற்கு ஷிவாத்மிகா ஒப்புக் கொள்கிறார். இறுதியில் ஷிவாத்மிகா விடிவி கணேஷீக்கு வரன் அமைத்து கொடுத்தாரா கிஷன் தாஸ் வேலையில் நீடித்தாரா காதலை வெறுக்கும் ஷிவாத்மிகா, காதல் தான் வாழ்க்கை என்று வாழும் கிஷன் தாஸ் இருவருக்கும் நடக்கும் சவாலில் யார் ஜெயித்தனர் அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
கிஷன்தாஸ் இளமை துள்ளளுடன் படம் முழுவதும் தன்னுடைய நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.
ஷிவாத்மிகா தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
மற்றும் ஹர்ஷத்கான்,விடிவி கணேஷ்,பாண்டியன், துளசி ஆகியோர் தங்களின் உறுதுணையான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவும், சித்துகுமார் அவர்களின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
வித்தியாசமான கோணத்தில் திரைக்கதையமைத்து நகைச்சுவையுடன் கொடுத்துள்ள இயக்குனர் சாரங் தியாகு அவர்களுக்கு பாராட்டுகள்.
ஆரோமலே அனைவரும் ரசிக்கும்படியான அமர்க்களம்.
