சீதக்காதியில் என்னுடைய கேரக்டர் பேசப்படும் – அர்ச்சனா


படத்தின் நாயக கதாபாத்திரங்கள் எப்போதும் நேர்மையான நபர்களாக சித்தரிக்கப்படும் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயம் உண்டு. அவர்கள் திரையில் ஆதிக்கம் செலுத்தும் போது, உண்மையில் நாம் கவனிக்க வேண்டியது அவர்களின் மனைவிமார்களை தான். அவர்கள் பேசுவதற்கு அதிக வார்த்தைகளே இருக்காது, ஆனால் அவர்களது மௌனத்தில் இருக்கும் அவர்களின் துன்பங்களை உணர முடியும். இந்த குணங்களை நீங்கள் ஒரு பிரபல நாடக கலைஞர் அய்யாவின் மனைவி லக்‌ஷ்மியிடம் காணலாம். பிரபல நடிகை அர்ச்சனா அந்த லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு கிடப்பது ‘அய்யா’ என்று அழைக்கப்படும் ஒரு மனிதனால்தான். சீதக்காதியில் என் கதாபாத்திரம் மகிழ்ச்சி, துக்கம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளை கொண்ட ஒன்று” என்கிறார் அர்ச்சனா.

நான் முன்பே சொன்ன மாதிரி அது அய்யா, அவரை விஜய் சேதுபதியிடம் இருந்து பிரிக்க பார்க்க முடியவில்லை. இது படப்பிடிப்பின் போது மட்டுமல்ல, படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும் பார்க்கும் போது, இருவரையும் பிரித்து பார்க்க முடியவில்லை. அது எனக்கு மட்டுமல்ல குழுவில் உள்ள அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

பாலாஜி தரணீதரன் பற்றி புகழ்ந்து பேசுகிறார், அவர் கூறும்போது, “இதுபோன்ற ஒரு தனித்துவமான கதையை சிந்திக்க, அவருக்கு எது உந்துதலாக இருந்திருக்கும் என படப்பிடிப்பு முழுக்க நான் ஆச்சர்யப்பட்டேன். சமகால தலைமுறை இயக்குனர்கள் வழக்கமான முறையில் படம் எடுக்க, கவனம் செலுத்தும் நேரத்தில் இவரின் சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நிச்சயமாக, அவர் தான் ‘அய்யா’வின் படைப்பாளி. அவரை மக்கள் கொண்டாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

விஜய் சேதுபதி 75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள இந்த படத்தை பேஸ்ஸன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சமீபத்திய சென்சேஷன் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.