*சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் ; மஹத் ராகவேந்திரா அறிவிப்பு*
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 47 நாட்களாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கிறது.. சாதாரண ஜனங்களின் நிலைபோலவே திரையுலகை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நிலையும் சிரமத்துடன் தான் நகர்கிறது.. இந்தநிலையில் கோடிகளை முடக்கி படம் எடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை தான் ரொம்பவே கேள்விக்குறியதாக மாறிவிட்டது.. தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக அவர்களது சுமையை குறைக்கும் விதமாக பல நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது ஊதியத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்து பெற்றுக்கொள்வதாக அறிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஹரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி போன்ற சிலரை தொடர்ந்து நடிகர் மஹத் ராகவேந்திராவும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார். வல்லவன், மங்காத்தா, சென்னை-28 2 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள மஹத் ராகவேந்திரா, ரசிகர்களுக்கு சினிமா அறிமுகத்தை தாண்டி பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிக நன்கு அறிமுகமானவர்.
தனது சம்பளத்தை குறைத்துக்கொள்வது குறித்து மஹத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது ;
“இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்த திரையுலகில் இருந்து வருகிறேன்.. சில படங்களில் நடித்துள்ளேன்.. இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன்..
இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான்.. திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்..
இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளதான் தான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளதான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்..
பத்து பெர்செண்ட் இருபது பெர்செண்ட்
குறைத்தாலும் பத்தாது. ஏனெனில் திரையரங்குகளுக்கு மக்கள் வர நாட்களாகும். பாதிக்கு மேலான சுமை தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. எப்படி போட்ட பணத்தை எடுக்கப் போகிறார்கள் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. இந்த சமயத்தில் சக கலைஞர்கள் பாதியளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் நல்லது.
என்னைப் பொருத்தவரையில் அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் குறைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்… என்னைப்போல வளர்ந்துவரும் நிறைய நடிகர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.. என்றுமே ஒரு நடிகனுக்கு சம்பளத்தையும் தாண்டி நிறைய படங்கள் பண்ணனும், நிறைய கேரக்டர்களில் நடிக்கணும் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கணும் என்பது தான் ஆசையாக இருக்கும்” என கூறியுள்ளார் மஹத் ராகவேந்திரா.