ஜெயம் ரவியின் ”அடங்க மறு” ரகசியம்!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கடந்த 6 வருடமாக, 4 படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். அவர் ஒரு இயக்குனர்களின் நடிகர், தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுபவர். ஒரு இயக்குனர் தான் நினைத்த விஷயங்களை மிகச்சரியாக திரையில் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆளுமை. கார்த்தியை பற்றி நான் நினைத்ததை சரி என திரையில் நிரூபித்திருக்கிறார் என்றார் நடிகர் பொன்வண்ணன்.

இயக்குனர் கார்த்திக் எனக்கு 10 வருடமாக பழக்கம். சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம் பணி புரிந்தவர். இதிலேயே அவர் படம் எந்தளவுக்கு தரமானதாக இருக்கும் என்பது தெரிந்து கொள்ளலாம். ஜெயம் ரவி படப்பிடிப்பில் அதிகம் பேசமாட்டார். ஆனால், ஒரு வரி பேசினாலும் ஒட்டுமொத்த குழுவையே சிரிக்க வைப்பார். அந்தளவு நகைச்சுவை உணர்வு உடையவர். அடங்க மறு படத்துடன் எத்தனை படம் ரிலீஸ் ஆனாலும், இந்த படம் தனித்து நிற்கும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் நடிகர் சம்பத் ராஜ்.

அடங்க மறு தமிழில் என்னுடைய இரண்டாவது படம், என்னை தமிழ் சினிமாவில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி. என்னுடைய சொந்த கம்பெனி படத்தில் நடித்த மாதிரி உணர்ந்தேன், அந்த அளவுக்கு என்னை பார்த்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள். ஜெயம் ரவியின் குணம் தான் அனைத்து கதாநாயகிகளுடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைய காரணம். இயக்குனர் கார்த்திக் கதையை சொன்ன போது, அவரின் சிந்தனையை நினைத்து வியந்து போனேன். பெண்கள் கதாபாத்திரங்களை மிக உயர்வாக வடிவமைத்திருக்கிறார் என்றார் ராஷி கண்ணா.

ஒவ்வொரு படமுமே எனக்கு ஒரு வாய்ப்பு என நினைக்கிறேன். அந்த வகையில் இந்த படம் மிக முக்கியமான விஷயம். கார்த்திக் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷல். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. இயக்குனர் என் மேல் வைத்த நம்பிக்கை அளப்பரியது. ஜெயம் ரவிக்கு சமூக அக்கறை இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். என் 2 வயது குழந்தை நாயகி ராஷி கண்ணாவை பார்பி டால் என அழைக்க்கிறார். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த நாயகியாக இருக்கிறார் ராஷி என்றார் எடிட்டர் ரூபன்.

நான் சினிமாவுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், ஒரு சில படங்களில் வேலை செய்யும் போது தான் அந்த படம் ஜெயிக்கும், சிறந்த படமாக இருக்கும் என்ற உள்ளுணர்வு வரும். அப்படி ஒரு உணர்வு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயம் ரவி தொடர்ந்து நல்ல, குடும்பப் பாங்கான படத்தில் நடிக்க வேண்டும். உங்களிடம் எல்லோரும் அதை மிகவும் விரும்புகிறார்கள் என்றார் நடிகர் அழகம் பெருமாள்.

ஒரு இயக்குனர் நமக்கு சுதந்திரம் கொடுத்து வேலை பார்க்க விடும்போது தான் புதுவித இசை கிடைக்கிறது. இயக்குனர் கார்த்திக் மிகவும் நல்ல மனிதர், எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார். இந்த படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கும். சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் படமாக இருக்கும். ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் எப்போதுமே சூப்பர் ஹிட். இந்த படத்தில் 4 பாடல்கள், அதில் சாயாலி பாடல் முதல் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் மிகவும் பாஸிடிவ்வான படம் என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

நான் 10 வருடம் முன்பே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது, ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். நான் இதயதிருடன் படத்தில் முதலில் ஆரம்பிச்சதும் ஜெயம் ரவியிடம் தான், கடைசியாக ஆதி பகவன் படத்தில் முடித்ததும் அவரிடம் தான். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை.

நான் எழுதுயிருந்த கதை ரொம்பவே ராவாக இருந்தது, அதன்பிறகு 40 காட்சிகளை மாற்றி எழுத வேண்டியிருந்தது. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம், இந்த படத்தோடு ரிலீஸ் ஆகும் எல்லா படமும் நல்லா ஓடணும் என்றார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமைசாலிகள், அனுபவசாலிகள். கார்த்திக் இந்த கதையை என்னிடம் சொன்னபோது நான் வியந்து போனேன். சீரியலில் பெண்களை மையப்படுத்திய கதைகளை தான் தேர்ந்தெடுப்போம். அந்த மாதிரி பெண்கள் பிரச்சினையை மையப்படுத்திய இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஜெயம் ரவி மாதிரி நல்ல கருத்துக்களை படத்தில் சொல்ற நடிகர்கள் நடிச்சா தான் நல்லா இருக்கும் என முடிவெடுத்தோம். இந்த படம் பேசும் கருத்துக்கள் எல்லோரையும் சிறப்பாக சென்றடையும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

ரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும், ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள் தான் பேசணும், நாங்க பேசக்கூடாது. எனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குனர்கள் தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்று வரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம், கேட்டதை விடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர். ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம். ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர் தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங்.

எம் குமரன் படத்துக்கு விஜி தான் வசனம் எழுதினார், மிகப்பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்கு தான் எழுதியிருக்கிறார், நிச்சயம் பெரிய ஹிட் ஆகும். ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பது தான் இது சிறப்பு. ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பபே பிடித்தது. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் அடங்க மறு. வரும் 21ஆம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போ தான் தமிழ் சினிமா நல்லா இருக்கும் என்றார் நடிகர் ஜெயம் ரவி.

இந்த சந்திப்பில் நடிகர்கள் கஜராஜ், மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், கலை இயக்குனர் இளையராஜா, வசனகர்த்தா விஜி, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.