மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் ! 


மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் !

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது !

2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட இத்தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் 2022 ஏப்ரல் 22 முதல்  டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த  வெப் சீரீஸீன் கதை.

தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார்.

இத்தொடரில் நடித்து பிரபலமான முந்தைய தொடரின் நடிகர்கள், புதிய தொடர் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் ராஜு கூறியதாவது..
என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு தளமாக இருந்தது ‘கனா காணும் காலங்கள்’ தொடர் தான். நான் காலேஜ் போய் படித்ததை விட இந்த தொடரில் நடித்த ஞாபகங்கள் தான் அதிகம் இருக்கிறது. அது ஒரு லைஃப் ஸ்டைல். கானா காணும் பலருக்கு என்னை மாதிரி நிறைய பேருக்கு ஒரு தளமாக இருந்துள்ளது. கனா காணுங்கள் இதோ புதிய தொடர் வருகிறது நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் பால சரவணன் கூறியதாவது…
கனா காணும் காலங்கள், இந்த பெயரை கேட்டவுடன் உள்ளூர ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. எனக்கு பல கனவை நனவாக்கி தந்தது இந்த தொடர் தான். நான் நடிகனாக இருக்க காரணம் இந்த தொடர் தான். எங்களுக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ அதே போல் இந்த புதிய தொடருக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது…
கனா காணும் காலங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத உணர்வு. அது மீண்டும் வரப்போகிறது. நிறைய புதிய திறமைகளுடன் புதிய ஞாபகங்களுடன், சிரிப்பு சந்தோஷம் தர வரப்போகிறது, பார்த்து மகிழுங்கள் நன்றி.

நடிகர் விஷ்ணு கூறியதாவது…
எனக்கு நடிகர் ஆக ஆசை ஆனால் சொல்லிக்கொள்ள தயக்கம். அதை உடைத்து அந்த கனவை நனவாக்கி தந்தது கனா காணும் காலங்கள் தான். இப்போது மீண்டும் கனா காணும் காலங்கள் வரப்போகிறது. நான் எப்படி ஜெயித்திருக்கிறேனோ அதே போல் புது திறமையாளர்கள் வரப்போகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவையும் தாருங்கள். நன்றி.

வரும் 2022  ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் கண்டுகளியுங்கள்.