கண்ணப்பா விமர்சனம்

கதையின் நாயகனான விஷ்ணு மஞ்சு கதை,திரைக்கதை எழுதி நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு சிறு வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், கடவுள் நம்பிக்கையிழந்து இனிமேல் இந்த ஊரில் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று தங்கள் இனத்தை காப்பவனாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாத்திகனாக வளர்கிறான்.அவனின் தந்தை சரத்குமார் அந்த கிராமத்தின் தலைவராக பழங்குடி மக்களை வழி நடத்துகிறார்.இந்நிலையில் மோகன் பாபு நெடுங்காலமாக பக்கத்து மலை கிராமத்தில் மற்றவர்கள் அறியாத வண்ணம் பூஜை செய்து பயபக்தியுடன் வாயு லிங்கத்தை யார் கண்ணிலும் படாதவாறு பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகிறார். வாயுலிங்கத்தின் மகிமையை கேள்விப்பட்டு பெரும் படைகள் வைத்திருக்கும் அரக்க குணம் நிறைந்த அர்பித் ரங்கா தன் படை ஆட்களை அனுப்பி வாயு லிங்கத்தை களவாட நினைக்கும் நேரத்தில் விஷ்ணு மஞ்சுவுடன் எதிர்பாராத விதமாக சண்டை ஏற்பட அர்பித் ரங்காவின் ஆட்கள் அடிபட்டு திரும்பி செல்கின்றனர்.இதனால் கோபமாகும் அர்பித் ரங்கா விஷ்ணு மஞ்சு வசிக்கும் பட்டியை அழிக்க படையெடுத்து வருகிறான். இதை கேள்விப்படும் சரத்குமார் ஐந்து பட்டி இன மக்களை ஒன்று திரட்டி வில்லனை எதிர்க்க தலைவனாக விஷ்ணு மஞ்சுவை தேர்வு செய்கின்றார். இதனிடையே சிவனை வழிபடும் ப்ரீத்தி முகுந்தன் மீது விஷ்ணு மஞ்சுவுக்கு காதல் ஏற்பட, அதனால் பட்டி பழங்குடி மக்களிடையே மோதல் எற்படுகிறது. போருக்கு ஒத்துழைக்காத மற்ற பட்டி மக்களின் விருப்பப்படி காதல் பிரச்னை காரணமாக சரத்குமார் தனது மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார். தனியாக செல்லும் விஷ்ணு மஞ்சு தந்தையை பிரிந்து செல்லும் மனவருத்தம் இருந்தாலும் காதலி ப்ரீத்தி முகுந்தனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் அர்பித் ரங்கா படையெடுத்து வர சரத்குமார் மற்ற பட்டி பழங்குடி மக்களை காப்பாற்றிவிட்டு உயிரை துறக்கிறார்.அப்பாவின் இறப்பை கேள்விப்படும் விஷ்ணு அர்பித் ரங்காவின் மொத்த படையை எதிர்கொண்டு வெற்றி காண்கிறான். இது வரை கதை விஷ்ணு மஞ்சுவின் வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதும்,அவரின் பூர்வீக தொடர்பு என்ன அக்‌ஷய் குமார் விஷ்ணுவை சிவ பக்தனாக மாற்ற என்ன செய்தார் சிவராத்திரியன்று விஷ்ணுவுக்கு நடந்த சம்பவங்கள் என்ன இறுதியில் சிவபெருமான் வைத்த சோதனையில் விஷ்ணு எவ்வாறு கண்ணப்பன் ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கதை, திரைக்கதை எழுதி திண்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு படம் முழுவதும் மிகவும் திறமையாக வலம் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார் பாராட்டுகள்.
பழங்குடி பெண் காதலியாக ப்ரீத்தி முகுந்தன் தன்னுடைய சிறந்த நடிப்பாலும் மற்றும் கவர்ச்சியாகவும் படம் முழுவதும் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
அழுத்தமான வசன உச்சரிப்பும் கம்பீரம் நிறைந்த பார்வையுடன் மோகன் பாபு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார்.
மற்றும் பிரபாஸ்,மோகன்லால்,அக்ஷய் குமார்,சரத் குமார்,கஜல் அகர்வால், அர்பித் ரங்கா,பிரம்மனந்தம்,சிப்தகிரி,முகேஷ் ரிஷி,மாதுபாலா,அஹரி பாபர்யா,பாலாஜி, சம்பத் ராம்,லாவி பஜ்னி,சுரேங்கா வான், கௌசல் மற்றும் ஆதர்ஸ் ரகு ஆகியோர் தங்களது திறமை முழுவதையும் தந்து நடித்துள்ளனர்.
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவும் ஸ்டீபன் தேவாஸின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
கண்ணப்ப நாயனாரின் புராண கதையை பிரம்மாண்ட காட்சிகளின் ஆடம்பரத்துடன் சாதி,மத பேதமில்லாத தூய்மையான பக்தியை பல முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிக திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் முகேஷ் குமார் சிங் பாராட்டுக்கள்.
கண்ணப்பா அனைவரும் பார்க்கும் படியான பிரம்மாண்ட பக்தி மயம்.