தற்போதைய அரசியல் களபரம் தான் “எல் கே ஜி”

அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான ‘LKG’ உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில்  படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “இதுபோன்ற எதையும் நாங்கள் முன்னதாக திட்டமிடவில்லை, இது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வெகுஜனங்களிடையே திரைப்படத்தை கொண்டு சேர்க்க பல தனித்துவமான, சிறப்பு உத்திகளை கையாளும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் சார் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்கு மட்டுமல்ல, அவர் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் தனித்துவமான விளம்பரங்களை செய்கிறார். அவர் தயாரித்துள்ள LKG குழுவில் பங்கு பெற்றது எங்கள் அதிர்ஷ்டம். எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களின் வெற்றிக்கு காரணமாக இருப்பதோடு, படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள். டிரெய்லர் மற்றும் பாடல்களை பற்றிய பாராட்டுகளை கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார். பா.விஜய் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகளுக்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.