லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா விமர்சனம்

கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூருக்கு புதிதாக குடி வருகிறார். 20 ஆண்டுகள் மேல் ஸ்வீடனில் வசித்து வந்த இவருக்கு வெயிலின் தாக்கம் பட்டால் அவரது சருமம் பொசுங்கி விடும் அளவிற்கு புண்ணாகும். அதனால் இரவில் மட்டுமே வெளியே வரும் கல்யாணி ஒரு ஓட்டலில் வேலை செய்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நஸ்லென் அவரது நண்பர்கள் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் கல்யாணியின் பிளாட்டுக்கு எதிரே வசிக்கிறார்கள்.வேலை செய்யாமல் நண்பர்கள் குழு எப்பொழுதும் குடியும் கும்மாளமுமாக பொழுதை கழிக்கின்றனர். நஸ்லென் தற்செயலாக கல்யாணியை பார்த்து பிடித்து போக அவளுடன் பழக நினைக்கின்றார்.முதலில் தயங்கும் கல்யாணி பின்னர் நஸ்லெனுடன் பழகுகிறாள். இந்த சமயத்தில் அந்த நகரில் தனியாக செல்லும் மக்களை குறிவைத்து மயக்க ஊசி போட்டு உடல் பாகங்களை திருடும் கும்பல் நடமாட்டம் அதிகரிக்கிறது. இதற்கு உடந்தையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி இருக்கிறார்.கடத்தல் கும்பலிடமிருந்து சண்டையிட்டு ஒரு பெண்ணை மீட்கிறார் கல்யாணி. இதனால் சாண்டி கல்யாணியை கொல்ல சதி திட்டம் தீட்டுகிறான்.இந்நிலையில் நஸ்லென் கல்யாணியின் நடவடிக்கைகளின் மேல் சந்தேகப்பட்டு கண்காணிக்க தொடங்க பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.கல்யாணி பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடி மலைவாசியான கல்லியங்காட்டு நீலி என்பதும், மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் பெண் ஆவி யக்ஷி என்பதும், தீயவர்களை அழிக்க வந்த பாதுகாவலர் சூப்பர் பவர் நிறைந்தவர் என்பதை தெரிந்து கொள்ளும் நஸ்லென் பயத்தினால் வெளவெளத்து போகிறார். கல்யாணியிடமிருந்து விலக நினைக்கும் போது அவளை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட வேறு வழியில்லாமல் அவருடன் பயத்துடன் பயணிக்கிறான். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி கல்யாணியை கண்காணிக்க தொடங்கி பின் தொடர்ந்து அவரது வீட்டிற்குவந்து விட அவனிடம் சண்டை போடும் கல்யாணி சாண்டியின் கையை கடித்து விடுகிறார்.அங்கிருந்து வெளியேறும் சாண்டி தன் உடல் நிலையில் மாற்றத்தை உணர்கிறார். கல்யாணி சாண்டியால் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் போது நஸ்லென் அவரது நண்பர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.இவர்கள் அனைவரும் உயிரோடு தப்பித்தார்களா சாண்டி கல்யாணிக்கு எதிராக பெரிய தீய சக்தியாக உருவாகி என்ன செய்தார் கல்யாணியால் அதை முறியடிக்க முடிந்ததா கல்யாணியின் கடந்த கால ரகசியங்களால் நிகழ்காலத்தில் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன்அமானுஷ்ய சக்திகள் நிரம்பிய சூப்பர் வுமனாக தன்னுடைய நடை,உடை, பாவனையில் கச்சிதமாக பொருந்தி அசத்தலாக நடித்துள்ளார். மற்றும் நஸ்லென் கே கஃபூர்,சந்து சலீம்குமார்,அருண் குரியன்,சாண்டி மற்றும் பலர் அவர்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
நிமிஷ் ரவி அவர்களின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.வித்தியாசமான திரைக்கதையமைத்து ஆச்சர்யங்கள்,மர்மங்கள் நிறைந்த பிரம்மாண்ட படைப்பை கொடுத்திருக்கும் இயக்குனர்
டொமினிக் அருண் அவர்களுக்கு பாராட்டுகள்.
லோகா–அத்தியாயம் ஒன்று சந்திரா வித்தியாசமான திகில் நிறைந்த த்ரில்லர்.