கதையின் நாயகன் விமல் யாளி மலைப்பகுதியில் உள்ள குரங்கணி எனும் கிராமத்தில் தலைவனாக வலம் வருகிறார். இந்த கிராமத்தில் யார் கண்ணுக்கும் தெரியாத‘யாளீஸ்வரர் சிலை’ஒன்று கோயிலில் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சாமி சிலையை தொட்டு பார்த்தால் தான் அங்கு சாமி சிலை இருப்பது உணர முடியும்.சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் தான் அச்சிலையை அனைவரும் கண்களால் காண முடியும்.இந்த சாமி சிலையை இன்னொரு பழங்குடி மக்கள் அபகரிக்க 3000 ஆண்டுகள் முயற்சி செய்து வருகிறார்கள்.பல ஆண்டுகளாக முயற்சிகள் செய்தும் அது தோல்வியில் தான் முடிந்தது. எனவே இந்த இரு கிராம மக்களிடையே பகை தொடர்ந்து இருந்து வருகிறது.விமல் சேனா என்ற யானையை தனது மகனை போல் பாவித்து வளர்த்து அதனுடன் வலம் வந்து அந்த கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.பழங்குடி மக்களின் தலைவி மஹீமா குப்தா விமலைக்கொன்று,அந்த சாமி சிலையை அடைந்தே தீருவேன் என்று சபதம் எடுத்து அதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறாள்.அதே நேரத்தில் அங்கே ஊழல் நிறைந்த ஒரு வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் அந்த சிலையை அடைய விரும்புகிறான். வனப்பகுதி காவல் அதிகாரி சாமி சிலையை கைபற்ற பழங்குடித் தலைவி மஹீமா குப்தாவுக்கு உதவுவது போல் நடித்து அவர்களை அந்த சாமி சிலையை எப்படியாவது கொண்டு வரும்படி சொல்கிறான்.கிராமத்தில் சித்ரா பௌர்ணமி வருகிறது அன்று கோவில் திருவிழா நடத்த கிராம மக்கள் முயற்சி செய்கிறார்கள். திருவிழா வேளை தீவிரமாக நடைபெறும் போது விமல் வளர்த்து வந்த சேனாவுக்கு மதம் பிடித்து அவரது மகள் இலக்கியாவை கொன்று விடுகிறது.அத்துடன் யானையும் திடீரென காட்டுக்குள் ஓடி காணாமல் போகிறது.சித்ரா பௌர்ணமி அன்று மலை அடிவாரப்பகுதி பழங்குடி மக்கள்,சாமி சிலையை திருட முயலும் போது இரு கிராம மக்களும் மோதிக்கொள்கிறார்கள்.அந்த வேளையில் வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் அங்கே காவல்துறையின் உதவியுடன் சிலையை திருடும் கபீர் துஹான் சிங் என்ற கொள்ளையனுடன் கூட்டு சேர்ந்து விமல் அவரது கிராம மக்கள் மற்றும் மஹிமா குப்தா அவளது கூட்டாளிகளை கொடூரமாக தாக்கி சாமி சிலையை அபகரிக்கும் போது என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
செங்குட்டுவன் என்ற வலுவான கதாபாத்திரத்தை ஏற்று விமல் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
பொம்மியாக சிருஷ்டி டாங்கே ஒரு தைரியமிக்க பெண்ணாக வலம் வருகிறார்.
மற்றும் யோகிபாபு,ஜான் விஜய்,கபீர் துஹான்சிங்,மஹிமாகுப்தா,விஜய்சேயோன்,அல்ஃப்ரெட்ஜோஸ், சுபாங்கிஜா,சிவகிருஷ்ணா,இலக்கியா ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் பிரவீன் குமார் இசையும், உதய் பிரகாஷ் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
புதுமையும்,விறுவிறுப்பும் கலந்து திரைக்கதை அமைத்து இயக்கி உள்ள இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் அவர்களுக்கு பாராட்டுகள்.
மகாசேனா பிரமாண்டம்.
