அம்மு அபிராமி நடிக்கும் போகாதே மூலம் இசை ஆல்பத்தில் களம் இறங்கியிருக்கும் இசையமைப்பாளர் சி சத்யா*
திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் சி சத்யா, முதன்முறையாக இசை காணொலி ஒன்றை (இண்டிபெண்டென்ட் ஆல்பம்) உருவாக்கியுள்ளார். போகாதே என்று தலைப்பிடப்பட்டுள்ள இதில் அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயற்கையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி அன்பை விதைக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. 2021-ம் ஆண்டு வெளியான தீதும் நன்றும் திரைப்படத்தை இயக்கிய ராசு ரஞ்சித் போகாதேவை இயக்கியுள்ளார்,
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் பாடலாசிரியரான லாவரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல இந்தி பாடகரும் சல்மான் கான் நடித்த பாலிவுட் பிளாக்பஸ்டரான ரேஸ் 3-ன் இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஷிவாய் வியாஸ் இப்பாடலைப் பாடியுள்ளார்.
ஆல்பத்தில் தடம் பதித்திருப்பது குறித்து சத்யா கூறுகையில், “ரசிகர்களின் வேண்டுகோள்களே இதற்குக் காரணம். என்னை ஆல்பம் செய்ய சொல்லி சமூக வலைதளப் பக்கங்களில் அவர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் போகாதே அமைந்துள்ளது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “போகாதே வை முழுமையாக உருவாக்க எங்களுக்கு ஒரு மாதம் ஆனது. குழுவினர் அனைவரும் சிறந்த உழைப்பை வழங்கியுள்ளனர். பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவராலும் இது வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
இன்று மார்ச் 16-ம் தேதி அம்மு அபிராமியின் பிறந்தநாளை ஒட்டி தனது யூடியூப் சேனலில் போகாதேவை சத்யா வெளியிட்டுள்ளார். இந்த ஆத்மார்த்தமான பாடல் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என்று அவர் கூறினார்.
என்பிகாயின்.காம் (NBICOIN.COM) தளத்தில் இப்பாடல் என் எஃப் டி (NFT) வடிவில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. போகாதேவின் ஒளிப்பதிவை ஏ கே தினேஷ் கையாண்டுள்ளார். வடிவமைப்பு: ஸ்ரீ அரவிந்த் கேசவன். ஸ்பேஸ் புரொடக்ஷன் பேனரில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.