இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி. – பா.இரஞ்சித்


இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி.

– பா.இரஞ்சித்

இசைஞானி இளையராஜாவின் இசையே ஒரு புரட்சிதான்.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.

பல்வேறு ஓவியர்கள் இதில் கலந்துகொண்டு ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார்கள். தலித் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்

கலை இங்கு எல்லோராருக்கும் பொதுவானதுதான் ஆனால் கலைஞர்கள் அவர்களின் பார்வையில் இந்த சமூகத்தை , இந்த அழகியலை , வாழ்வியலை பார்த்து தங்கள் கலைகளில் பிரதிபலிப்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன.

கல்லூரி காலங்களில் எங்களது ஆசிரியர் ஓவியர் சந்துரு அவர்களோடு தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நிலத்தின் அழகியலை படம் வரைவதற்க்காக சென்றிருந்தோம் , மிக அழகான மலைகள், பசுமைபோர்த்திய வயல்கள், வண்ணவண்ண பூக்கள் என்று அழகியலின் உச்சத்திலிருந்தது.
அந்த இடத்தை சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அதன் அழகியல் தெரியும்.
ஆனால் அந்த நிலத்தில் அதே நிலத்தை சார்ந்த ஒடுக்கப்பட்டவர் ஒருவர் கழுத்தருக்கப்பட்டு கொல்லப்பட்டு
இரத்தம் வடிந்த
உடல் அந்த நிலத்தில் கிடக்கும்பொழுது அந்த உடலோடு சேர்த்து அந்த அழகிய காட்சியை பார்க்கும் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையில் அந்த இயற்கை காட்சி எப்படி தெரியும்?

அப்படித்தான் கலைகள் , கலைஞர்கள் வழியாக பார்க்கப்படுவதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன என்பதை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

இப்படித்தான் கலைஞர்கள் அவர்களின் இடத்திலிருந்து , அவர்கள் வாழ்விலிருந்து கலையை அணுகுவதும் அதை படைப்பதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.
அதன் வெளிப்பாடுதான் இந்த ஓவியகண்காட்சி.

இசைஞானி அய்யா அவர்கள் இந்த இசைத்துறையில் செய்த சாதனைகள் நம் எல்லோருக்கும் தெரியும்.
இசைத்துறை யார் கையிலிருந்தது? அங்கிருந்து அதை
ஜனநாயகப்படுத்தப்பட்ட இசையாக எல்லோருக்குமானதாக மாற்றியதில் இளையராஜா அய்யா செய்திருப்பது பெரும்புரட்சிதான்.
அவர் இசையின் வாயிலாக மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும் வலிமை மிக முக்கியமானது, இப்படிப்பட்ட வலிமையான கலைஞரை முக்கியமானவரை கைப்பற்றுவதன் மூலமாக, அவர்மூலமாக ஒரு வார்த்தையை சொல்லுவதன் மூலமாக அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்துவதற்கான வேலைதான் இங்கு நடக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட சூழலில்தான் இதுபோன்ற ஓவியக்கண்காட்சிகள் நடத்துவது ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன்.