அப்பாவின் பெயரான தண்டபாணியை தன் பெயரில் கொண்டிருப்பதால் நாயகன் லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் நாயகி சம்பிகா பூரி ஆகிறார்.
இருவருக்கும் காதல் ஓடிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் சம்பிகாவின் தோழி திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிய அதே பிரச்சனை தங்களுக்கும் வந்துவிடக் கூடாது என்று முதலிலேயே காதலனைப் பிரிந்துவிட முடிவு செய்கிறார் சம்பிகா.
அது மட்டும் அல்லாமல் சம்பிகாவின் பெற்றோரும் விவாகரத்து பெற்று வாழ்ந்து வருபவர்கள்தான். ஆனால் நல்ல மனம் கொண்ட சம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேல் தலையிட்டு இருவரையும் ஒரு வார காலத்திற்கு லிவ் இன் முறையில் வாழ்ந்து பார்த்து பின்னர் முடிவெடுக்க சொல்கிறார்.
அந்த ஒரு வாரம் எப்படிப் போனது – அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.
பாணியாக நடித்திருக்கும் லிங்காவின் நடிப்பு இதுபோன்ற சீரிஸ்களுக்கு சரியான ஆள் லிங்கா என்று ஆகிவிட்டது.
சம்பிகாவுக்கு நடிக்கவும் தெரிவது நல்ல விஷயம். உணர்ச்சிகளைக் காட்டுவதற்கு அவரது முகமும் நன்றாக ஒத்துழைக்கிறத.
நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா, அடுக்குமாடி குடியிருப்பு சங்க செயலாளர் கோபால் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பாணியின் நண்பனாக வினோத் சாகர் கனிகாவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் காட்சிகள் கலகலப்பானவை.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவும், இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரும் இந்த சீரிஸ்க்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.
நறுக்குத் தெறித்தாற்போல் ஒன்றரை மணி நேரப் படத்தை வெட்டிவிட்டால் ஒரு வெற்றிகரமான திரைப்படமாகவும் மாறக்கூடிய சாத்தியமுள்ள கதை.
குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ரசனையான காதல் கதையை தந்ததற்கு பாலாஜி வேணுகோபால் அவர்களுக்கு பாராட்டுகள்.
மொத்தத்தில் பானி பூரி எல்லோரும் சுவைத்து சாப்பிட லாம்
