டாணாக்காரன் விமர்சனம்


அறிமுக இயக்குனர் தமிழ் இயக்க விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம் எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், பிரகதீஸ்வரன், கார்த்திக் நடித்திருக்கும் படம் தான் “டாணாக்காரன்”.
1997-98 காலகட்டத்தில் நடக்கும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பணியில் சேர்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி பள்ளியில் நடக்கும் ஒருவிதமான போட்டி, பொறாமை, ஈகோ, கொடுமை என மனம் ரணமாகும் படியாக உருவாகியிருக்கும் படம் தான் இந்த “டாணாக்காரன்”.
காவல்துறை பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் பலர் போலீஸ் பயிற்சிக்காக அங்கு வருகின்றனர். இளைஞர்களோடு சேர்த்து அங்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு அதுவரை பணியமர்த்தபடாமல் இருக்கும் இன்னும் சிலரும் பயிற்சிக்காக வருகின்றனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 50 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.
அங்கு பயிற்சி ஆசிரியராக லால், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். குழு குழுவாக பிரிக்கப்பட்ட அனைவரும் பயிற்சி பெற ஆரம்பிக்கின்றனர். அந்த இளைஞர்களுள் விக்ரம் பிரபுவும் ஒருவர்.
தன் குழு தான் அனைத்திலும் முன்னிலையாக இருக்க வேண்டும் என்று திடமனம் கொண்டவர் லால். இவரது டார்ச்சரான பயிற்சியை தாங்க முடியாமல் பலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். பலர் அங்கிருந்து ஓடி விடுகிறார்கள்.
அங்கு நடக்கும் ஒரு சில குற்றங்களை அவ்வப்போது உயர் அதிகாரிகளிடம் குறையாக சொல்கிறார் விக்ரம் பிரபு. இதனால் விக்ரம் பிரபு லால் உடன் மோதலை எதிர்கொள்கிறார். விக்ரம் பிரபு மற்றும் அவரது குழுவை தோற்கடிக்க சவால் விடுகிறார் லால்.
இறுதியில் வென்றது யார்.? என்பதே படத்தின் மீதிக் கதை. கடின உழைப்பு கொடுத்த்இருக்கிறார் விக்ரம் பிரபு. இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு சிறந்த மைல்கல் படமாக டாணாக்காரன் அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொடர்ந்து இதே மாதிரியான கதைகளை தேர்ந்தெடுக்க நடிக்க வேண்டும்.
நாயகி அஞ்சலி நாயருக்கு இப்படத்தில் பெரிதான ஸ்கோப் இல்லை.
தன் அனுபவ நடிப்பை இப்படத்தில் காட்டியிருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
கர்ணன் படத்திற்கு பிறகு லால் அவர்களுக்கு டாணாக்காரன் பேசும் படமாக அமைந்திருக்கிறது. தனது அழுத்தமான கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் லால். வில்லனாக பல படங்களில் வந்து சென்ற போஸ் வெங்கட் அவர்களுக்கு இப்படத்தில் நல்லவராக ஒரு கதாபாத்திரம். அதைக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். மற்றபடி, பாவேல், பிரகதீஸ்வரன், கார்த்திக் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து,நடித்துள்ளனர்.
மாதேஷ் மாணிக்கம் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக நிற்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
படத்தின் ஒட்டுமொத்த பலம் கதை மற்றும் இயக்கம் மட்டுமே. போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் கொடுமையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் நன்றாக யோசித்து செய்திருக்கலாம்.

மொத்தத்தில்
டாணாக்காரன் சிறப்பானவன்