
சந்தானம் குடும்பம் காலகாலமாக பானை தொழில் செய்து வருகிறது. இந்த வடக்குப்பட்டி கிராமம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தெய்வத்தை எடுத்துச் சென்றதாக ஒரு கதை உள்ளது. கடவுள் காணாமல் போன பிறகு ஊரே காட்டேரியின் துன்புறுத்தலின் பயந்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, காட்டேரி போர்வையில் நடமாடிக் கொண்டிருக்கும் அந்த மர்ம நபர் எதிர்பாராத தருணத்தில்,அதாவது சந்தானம் வீட்டில் இருந்து பானையை திருடி செல்லும் திருடனை துரத்தி செல்லும் போது, தற்செயலாக ராமசாமியின் பானையால் அந்த மர்ம நபர் வீழ்த்தப்படுகிறார். கிராம மக்கள் தங்கள் தெய்வம் ஒரு மண் பானை வடிவில் திரும்பியதாக நம்புகிறார்கள். அந்த பானையை தெய்வமாக வழிபட தொடங்குகின்றனர். தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்த அந்த நிகழ்வை வைத்து ராமசாமி விரைவாக பணம் சம்பாதிக்க கிராம மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி வடக்குப்பட்டி கிராம மக்களை ஏமாற்றி அந்த பானையை வைத்து ஒரு சிறிய கோயில் ஒன்றைக் கட்டி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், ராமசாமியின் செயல்பாடுகளைக் கண்டறிந்த வடக்குப்பட்டி தாசில்தார் கதிரேசன் கோயிலை வைத்து தானும் பணம் பார்க்க நினைக்கிறார். கோயிலில் இருந்து நிலையான பணத்தை சம்பாதிக்க ஒரு திட்டத்தைத் தீட்டுகிறார். அதற்கு ராமசாமி உடன்படாத போது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ராமசாமிக்கு சொந்தமான கோவில் சொத்துக்களை அபகரிப்பதற்காக தாசில்தாரின் சூழ்ச்சியால் கோயில் சீல் வைக்கப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக்கதை.
சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமியா தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்து தன்னுடன் பயணித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காமெடியில் அவர்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க உதவியுள்ளார்.
மேகா ஆகாஷ் தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
சேசு, மாறன், ரவிமரியா, நிழல்கள் ரவி, ஜான் விஜய், பிரசாந்த், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட அனைத்து பேரும் நிறைவான காமெடியை தந்துள்ளனர்.
தமிழ் நடித்துள்ள தாசில்தார் கதிரேசன் கதாபாத்திரம் கதைக்கு பெரிய பலம்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் தீபக்கின் ஒளிப்பதிவும் சிவானந்தீஸ்வரன் எடிட்டிங்கும் ராஜேஷ்ன் கலை இயக்கமும் படத்தின் வேகத்தை கூட்டியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் கதையை கொண்டு சென்றதற்காக அவரை பாராட்ட வேண்டும்.
வடக்குப்பட்டி ராமசாமி குழந்தைகளுடன் காணவேண்டிய பொழுது போக்கு.
