வல்லமை விமர்சனம்

பிரேம்ஜி தனது காதல் மனைவி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த
கொடுத்து விட்டு சில நாட்களில் எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார்.இந்த பாதிப்பால் பிரேம்ஜி கேட்கும் திறனை இழந்து விடுகிறார்.ஒரு காது கேட்கும் கருவியை அவர் பொருத்தி கொள்கிறார்.தனது மகள் திவதர்ஷினியை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக கிராமத்தை விட்டு,சென்னைக்கு வருகிறார். ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் அவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.சினிமா போஸ்டர்களை ஒட்டி பிழைப்பு நடத்தி தனது அன்பு மகளின் பள்ளிப் படிப்பை ஆதரித்து மகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.இந்தநிலையில் வழக்கம் போல் பள்ளியில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது தனக்கு பிறப்புறுப்பில் ரத்தம் வந்து அந்த இடத்தில் வலி இருப்பதாக தந்தையிடம் மகள் கூற மகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரேம்ஜி.மகள் பூப்பெய்து விட்டாள் தன் மகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் தீபா சங்கரிடம் ஆலோசனை கேட்கிறார். மகளை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அந்த குழந்தை அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்து உடைந்து போகிறார் பிரேம்ஜி.தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று மகள் தன் தந்தையிடம் கூறுகிறாள். அந்தக் காமக்கொடூரனை கண்டுபிடித்துத் கொல்வதன் மூலம் மட்டும் தான் தனக்கு உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் ஏற்பட்ட காயம் ஆறும் என்று அவள் நினைக்கிறாள். அந்த காமக் கொடூரன் யார் அவனை எப்படிக் கண்டுபிடித்து கொல்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
எப்போதும் வழக்கமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரேம்ஜி உணர்வுபூர்வமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரேம்ஜி மகளாக வரும் திவாதர்ஷினி மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.மற்றும் தீபா சங்கர்,வழக்கு என் முத்துராமன், சி.ஆர்.ரஜித்,சூப்பர்குட் சுப்ரமணி,சுப்பிரமணியன் மாதவன்,விது-பாபு,போராளி திலீபன் உட்பட அனைத்து கதாபாத்திரங்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.கே.வின் இசையும்,ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும் எடிட்டர் சி கணேஷ் குமாரின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம்.
சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் வலியை மிகவும் நேர்த்தியான முறையில் சொல்லி இருக்கும் இயக்குனர் கருப்பையா முருகனுக்கு பாராட்டுகள்.
வல்லமை வலி நிறைந்த போராட்டம்.