நாயகன் பிரசாந்த் பாண்டிராஜ் எம்.எஸ்.சி பட்டதாரியான இவரின் தலைமையாசிரியர் தந்தை பாலாஜி சக்திவேல் மகனை அரசாங்க உத்யோகத்தில் அமர வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார்.அதற்காக தீவிரமாக முயற்சி செய்தாலும் பிரசாந்த் பாண்டிராஜால் தேர்ச்சியடைய முடியாமல் விரக்தியில் இருக்கும் போது போலீஸ் கமிஷனரிடம் டிரைவராக இருக்கும் அவரது தாய்மாமன் காளி வெங்கட் ஆறுதல் சொல்லி அவரை போலீஸ் வேலைக்கான தேர்வை எழுத வைக்கிறார்.இறுதியில் தேர்வில் தேர்ச்சி பெற்று,தாய் மாமனின் சிபாரிசில் மூன்று மாத பயிற்சியிலேயே திருச்சி பொன்மலை கோட்டை காவல் நிலையத்தில் பிரசாந்த் பாண்டிராஜ் ஒரு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றுகிறார்.இவர் மிகவும் சாதுவான, மென்மையான மற்றும் சட்டத்திற்குப் பயந்து நடக்கும் ஒரு நபர் என்பதால் இந்த சுபாவத்தை அந்தத் தாலுகா காவல் நிலையமே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.இன்ஸ்பெக்டர் அருள் தாஸ் மற்றும் சக காவலர்கள் அவரை ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல், கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.காவல் துறைக்குள் தொடர்ந்து நடக்கும் இந்த வன்முறையும்,மரியாதைக் குறைவும் அவரை மனரீதியாகப் பாதிக்கிறது.இதன் உச்சகட்டமாக,அவரது வாழ்க்கையையே மாற்றிப்போடும் ஒரு கொடூரமான தாக்குதல் ஒரு கைதியால் அரங்கேறுகிறது.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தன் பாணியில் பழிவாங்கத் துணிகிறார்.மென்மையான போலீஸ்காரராக இருந்த இவர் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பேரும் பயப்படும் ஒரு கொடூரமான வேட்டைக்காரனாக மாறுகிறார்.காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட,யாரும் கண்டு கொள்ளாத பழைய ‘கைது வாரண்ட்’ வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு இவரிடம் வருகிறது.பழைய குற்றவாளிகளைத் தேடி அவர் நடத்தும் விசாரணைகள் வழக்கமான சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்காமல்.தனக்கு ஏற்பட்ட அவமதிப்புகள் மற்றும் ஆத்திரத்தின் காரணமாக,குற்றவாளிகளைப் பிடிக்க அவர் மிகக் கொடூரமான மற்றும் வன்முறையான வழிகளைக் கையாள்கிறார். குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கில் எல்லை மீறிச் செல்லும்போது,அவரது விசாரணையின் தீவிரத்தால் ஒரு கைதி காவல் துறையின் கஸ்டடியில் மரணமடைகிறான்.இந்த ஒரு சம்பவம், அவரது ஒட்டுமொத்த விசாரணை முறையையும், சட்டத்திற்குப் புறம்பாக அவர் எடுக்கும் முடிவுகளையும் பெரும் கேள்விக்குறியாக்குகிறது.அப்பாவியாக இருந்த ஒரு காவலர்,தனக்கு நேர்ந்த அநீதியால் எப்படி ஒரு பயங்கரமான அதிகார சக்தியாக மாறி,பழைய வாரண்ட் வழக்குகளைத் தனது சொந்த பாணியில் விசாரிக்க,பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே இந்தத் தொடரின் மீதிக்கதை.
பிரசாந்த் பாண்டியராஜ் தொடரின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல்,முதன்மைக் கதாபாத்திரமான கோட்டை கருப்புசாமியாக இயல்பான நடிப்பும்,சராசரி கடைநிலை போலீஸ்காரரின் ஆதாங்கத்தையும், ஏக்கத்தையும் சரியாக பிரதிபலித்து வாழ்ந்துகாட்டியுள்ளார்.
மற்றும் பாலாஜி சக்திவேல்,காளி வெங்கட், அருள் தாஸ்,அருள் ஜோதி,சாயாதேவி, நம்ரிதா,மீனா,கௌசல்யா,வையாபுரி, ஹலோ கந்தசாமி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ்-ஸின் இசையும்,ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் ஒளிப்பதிவும் மிகப்பெரிய பலம்.
இயக்குனர் விக்னேஷ் நடராஜன்,கதை உருவாக்கத்தில் பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைந்து சிறந்த முறையில் திரைக்கதை உருவாக்கி இணையத்தொடரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் சுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும்,பல திருப்பங்களுடன் இயக்கி இருக்கும் இயக்குனர் விக்னேஷ் நடராஜன் அவர்களுக்கு பாராட்டுகள்.
வாரண்ட் காக்கி சீருடைக்கு பின்னால் நடக்கும் அவமதிப்புகளின் உச்சம்.
