மருத விமர்சனம்

 

 

அண்ணன் தங்கையாக ராதிகாவும் சரவணனும் ராதிகாவின் மகனின் காது குத்து விழா நடக்கிறது. அதற்கு சரவணன் தன் சக்திக்கு மீறி செய்முறை செய்கிறார்.
அடுத்து  சரவணன் குடும்பத்தில்  விசேஷம் நடக்கிறது. அதற்கு  ராதிகாவின் குடும்பத்தார் எந்த செய்முறையும் செய்ய முடியாத நிலை.
இதனால் ஆத்திரமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை தரக்குறைவாக நடத்த, அவர் மனது உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட துடிக்கிறார்.
இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்கிறார்கள்.  இவர்களின் காதல் நிறைவேறியதா, விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா என்பதே  மீதிக்கதை.
கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.எஸ்.
கவனத்தை ஈர்க்கும் இயக்கம். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
ஜிஆர்எஸ் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவின் நடிப்பு, வழக்கம்போலவே, படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு இணையாக போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜி சந்திரசேகர்.
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார் சரவணன். மாரிமுத்து மற்றும் நாயகியாக நடித்திருக்கும் லவ்லின் ஆகியோர் கொடுத்த வேலையை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
செய்முறை ஒன்றை மட்டும் வைத்து திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியது வித்தியாசமான முயற்சி.
அதே நேரம் படத்தின் இரண்டாம் பாதி நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள்  கேட்கும் ரகம்.  பழனி பாரதியின் வரிகள் சிறப்பு.
பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து இருக்கிறது.

மருத ஒரு அழகான பாசமிகுந்த கிராமிய கதை

நடிகர் ஜி.ஆர்.எஸ்.

நடிகை லவ்லின் சந்திரசேகர்

இயக்குனர் ஜி.ஆர்.எஸ்.

இசை இளையராஜா

ஓளிப்பதிவு பட்டுக்கோட்டை ரமேஷ்