வீராபுரம் 220 விமர்சனம்
எழுத்து இயக்கம் – B. செந்தில்குமார்
நடிகர்கள் – அங்காடி தெரு மகேஷ் மேக்னா, சதீஷ், ஜெயக்குமார்
கதை – மணல் மாஃபியாவால் பாதிக்கப்படும், ஒரு சிறு நகரத்தின் நண்பர்கள் குழு அதற்கு எப்படி பழிவாங்குகிறது என்பதே கதை.
ஒரு சிறு நகரம் ஐந்து நண்பர்கள் அவர்களின் பிரச்சனைகள், காதல் சோகங்கள், இதற்கிடையில் அந்த சிறு நகரத்தில் மணல் கடத்தல் காரணமாக, ஆக்ஸிடெண்ட் என்கிற பெயரில் தொடர் கொலைகள் நிகழ்ந்து வர, அதில் நாயகனின் தந்தை இறந்து விடுகிறார் நாயகன் என்ன செய்கிறான் என்பதை சுவாரஸ்யம் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
எல்லா கதைகளும் சென்னை பக்கமாகவே சுற்றிக்கொண்டிருக்க, இந்தகதை தென் தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை சொல்வதோடு ஆரம்பித்து, அங்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் மணல் மாஃபியாவை சாடியிருப்பது அழகு. அங்காடிதெரு மகேஷ் தெரு தவிர மற்ற நடிகர்கள் அனைவருமே பெரும்பாலும் புதுமுகங்களே. ஆனாலும் மகேஷ் அவரது நண்பர்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்வை கண் முன் கோண்டு வந்திருக்கிறார்கள். இன்றைய இளைய சமுதாயத்தின் காதல், குடி, நட்பு எல்லாம் படத்தில் அழகாக வந்திருக்கிறது. வில்லனாக வரும் சதீஷ் தமிழ் சினிமா கண்டிப்பாக ஒரு நிரந்த இடத்தை பிடிக்கலாம். அவரது லுக்கும் நடிப்பும் தெலுங்கு சினிமா வில்லன்களை மிஞ்சும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது. அவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
முதல் பாதி முழுக்க இளைஞர்களின் காதல் , சண்டைகள் மட்டுமே படமாக இருக்கிறது. மணல் மாஃபியா சொல்ல வேண்டிய படத்தில் இடைவேளை வரை அது எதுவுமே வராமல் இருப்பது மைனஸ். சிறு படஜெட் படம் என்பது படமெங்கும் பிரதிபலிக்கிறது. இசையும் பிண்னணியும் ஒட்டாமல் இருக்கிறது பாடல்கள் பெரிதாக ஈர்க்காதது சோகம்.
படத்தின் பின்பாதி கொஞ்சம் பரபரப்பாகவே செல்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் நிஜத்தில் சாத்தியம் இல்லையென்றாலும் படத்திற்கு நியாயம் செய்கிறது. சண்டைக்காட்சிகள் பரபரக்கிறது. ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு தேவையானதை செய்துள்ளது. கணேஷின் படத்தொகுப்பு படத்தின் காட்சிகளை கச்சிதமாக ஒருங்கிணைத்திருக்கிறது. சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் குணசேகரன் கன்னியப்பன் இணை தயாரிப்பில், வீராபுரம் 220 சிறு பட்ஜெட்டில் ஒரு அழகான சினிமா.