இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா சைகல், போமன் ஐரணி, சமுத்திரக்கனி மற்றும் பல திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ள அதிரடி மற்றும் கமெர்சியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் திரைப்படத்தினை தொடர்ந்து உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமாகும். காப்பான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் பணிசெய்துள்ளார்.
சூர்யா வழக்கம் போல் ஒன் மேன் ஷோ தான், பிரதமரை காப்பாற்றும் ஆபிசர், துறுதுறுவென படம் முழுவதும் அவருடைய பார்வை போல் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. பைனலி சூர்யா இஸ் பேக்.
மோகன்லால் பிரதமராக நிகழ்கால பிரதமரை கண்முன் நிறுத்துகின்றார். என்ன தான் இந்தியா உணர்வு என்று பேசினாலும் பாகிஸ்தான் மக்களுக்காகவும் அவர் பேசும் காட்சி கைத்தட்டல் அல்லுகிறது.
ஆர்யா எப்போதும் போல் ஜாலி பாய் கதாபாத்திரம் என்றாலும் போமன் இரானியிடம் அவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. சாயிஷா போஷன் தான் ஏதோ பார்வையாளர்கள் திசை திருப்ப திணிக்கப்பட்டது போல் உள்ளது, அது பெரிதும் உதவவும் இல்லை.
வில்லன் நடிகராக வரும் வட இந்திய ஆள் துப்பாக்கி வித்யூ ஜமால் போல் மிரட்டுகின்றார். ஆனால், அதற்காக துப்பாக்கி போலவே பல காட்சிகள் இருப்பது தவிர்க்க முடியவில்லை.
கே வி ஆனந்த் படம் என்றாலே மீடியா, பயோ கெமிஸ்ட்ரி சார்ந்த விஷயங்களை அங்கங்கு நிரப்பியிருப்பார். அந்த வகையில் இதில் சிலிபிரா என்ற பூச்சி இனத்தை காட்டுவது பிரமிக்க வைக்கிறது, அது விவசாய நிலத்தை ஆகிரமிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.
ஆனால் அதே நேரத்தில் விவசாயிகளை காப்பாற்றுவதை விட, தமிழ் சினிமாவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தான் தோன்றுகின்றது, விவசாயி குறித்த வசனங்கள் அனைத்தும் கிளிஷேவ் தான்.
கே.வி.ஆனந்த் படத்தில் டுவிஸ்ட் இருந்துக்கொண்டே தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாமே நேரடியாக தெரிவதால் பெரிய டுவிஸ்ட் இல்லை, சில பல லாஜிக் குறைகள் இருந்தாலும் முடிந்த அளவிற்கு சரி செய்து நல்ல சவாரியாகவே கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால் அமித்ஷா சொன்ன ஒரே மொழி கொள்கையை கே.வி.ஆனந்த் தான் சரியாக கடைப்பிடித்துள்ளார். என்ன அவர் சொன்னது ஹிந்தி, இவர் காட்டியது தமிழ், காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி ஏன் பாகிஸ்தான் எம்பஸி ஆள் கூட தமிழ் தான் பேசுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு லண்டன், காஷ்மீர் என பல பகுதிகளை படத்தில் காட்டி செம்ம கலர்புல்லாக படம் பிடித்துள்ளனர். ஹாரிஸ் பாடல் மட்டுமில்லை பின்னணி இசையிலும் ஏமாற்றிவிட்டார்.
