*’சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!*
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

தயாரிப்பாளர் தமிழ்குமரன் பேசியதாவது, “’சிக்மா’ படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு இந்த படம் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோலவே லைகா நிறுவனத்திற்கும் இந்த படம் மிக முக்கியமானது. ஏனெனில், அவருடைய அப்பா இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவர்களின் ‘கத்தி’ படம் தயாரித்து தான் நாங்கள் திரைத்துறைக்கு அறிமுகமானோம். இப்பொழுது அவர் மகனை நாங்கள் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. இயக்குநராக சஞ்சய் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. படத்தை சிறப்பாக செய்திருக்கிறார். திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பவர் சுபாஸ்கரன் சார். ஜேசன் கடின உழைப்பாளி. நிச்சயம் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார். நடிகர்கள் சந்தீப், ஃபரியா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.
பாடலாசிரியர் விவேக், “‘சர்கார்’, ‘பிகில்’ படங்களின் ஆடியோ லான்ச் இங்கே தான் நடந்தது. இப்போது விஜய் சார் மகனுடைய படவிழாவில் இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தமன் இசையில் பல நல்ல பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஜேசன் சஞ்சய் சிறந்த கதை சொல்லி. சின்சியராக உழைத்துள்ளார். அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, “யாருடைய உதவியும் இல்லாமல் வெற்றி பெறுபவன் தான் சிக்மா என்று சொல்வார்கள். அப்படியான இந்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுத்த லைகா நிறுவனம், இயக்குநர் சஞ்சய்க்கு நன்றி. தமன் தான் ஒரிஜினல் பிளாக்பஸ்டர் இசையமைப்பாளர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்”.
நடிகர் அன்புதாசன், “இந்த வாய்ப்பு கொடுத்த லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சந்தீப், ஃபரியாவுக்கு நன்றி”.
நடிகர் சம்பத், “அடுத்தவர்களின் நேரத்தை மதித்து நடப்பவர் சஞ்சய். இயக்கத்தை அடுத்து நிச்சயம் அவர் படம் நடிக்கவும் வாழ்த்துகள். சந்தீப், ஃபரியா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த லைகா நிறுவனத்திற்கு நன்றி”.
நடிகர் ஷிவ் பண்டிட், ” லைகா நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. சஞ்சய் மிகவும் தன்மையானவர். அவர் கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி. சந்தீப், ஃபரியா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் ராஜூ சுந்தரம், “‘சிக்மா’ படத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்”.
திருப்பூர் சுப்பிரமணியம், “நடிகர் விஜய் அவர்களின் ‘பூவே உனக்காக’ படத்தில் இருந்து அவருடைய ஏராளமான படங்களை விநியோகம் செய்து இருக்கிறேன். இப்பொழுது சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். நடிகராகவும் அவர் வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை நாங்கள் விநியோகம் செய்கிறோம். படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.
தயாரிப்பாளர் தாணு, ” விஜய் அவர்களின் தெறி உள்ளிட்ட பல படங்களை தயாரித்து இருக்கிறேன். இப்பொழுது அவருடைய மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் இன்று முதல்வராக இருப்பதால் திரையுலகில் அவருடைய இடம் வெற்றிடமாக உள்ளது. அந்த இடத்தை நடிகராகவும் சஞ்சத் நிரப்ப வேண்டும். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்”.
நடிகர் விக்ராந்த், ” சிக்மா படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், இயக்குநரின் சித்தப்பாவாக மேடையில் நிற்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘லால் சலாம்’ மேடையில் சஞ்சய் உடன் இணைந்து பணிபுரிவதற்காக லைகா நிறுவனத்திற்கு நன்றி சொன்னேன். சிக்மா படத்தை இவ்வளவு பிரமாண்டமாக மாற்றி கொடுத்ததற்கு மீண்டும் நன்றி. என்னுடைய அண்ணா சஞ்சீவ் நிச்சயம் பெரிய இடத்திற்கு போவார். இந்த விழாவிற்கு நேரம் ஒதுக்கி வந்த சூரி அண்ணனுக்கு நன்றி. சஞ்சய்க்கு சிறு வயதில் கிரிக்கெட்டராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இப்பொழுது இயக்குநராக அவர் மிகப்பெரும் வெற்றி அடைவார். வாழ்த்துக்கள்”.
சஞ்சீவ், “சஞ்சய்யின் சித்தப்பாவாக இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய அண்ணியிடமிருந்து கால் வந்தது. சஞ்சய் படம் செய்யப் போகிறார். அவரை மீட் பண்ணு என்று சொன்னார். அதன் பிறகு நடந்ததுதான் சிக்மா. படம் நன்றாக வந்திருக்கிறது. லைகா நிறுவனத்திற்கு நன்றி”.
நடிகை ஃபரியா அப்துல்லா, “லைகா புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் சஞ்சய் மூலம் இந்தப் படத்தில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. நடிகர் சந்தீப், இசையமைப்பாளர் தமன் என உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. சிக்மா படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் சூரி, “அன்பு தம்பி சஞ்சய்க்கு பின்னால் அனைவரும் அன்பால் ஒன்று கூடியிருப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் அவர் ஜெயிக்க வேண்டும். லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் அண்ணன், தமிழ்குமரன் அண்ணன் இருவருக்கும் நன்றி. தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து செல்லக்கூடியவர்கள். நடிகர் சந்தீப், ஃபரியா இருவரும் திறமையானவர்கள். சஞ்சய்க்கு என்னுடைய வாழ்த்து மட்டுமல்லாது கோடிக்கணக்கானவர்களின் அன்பும் வாழ்த்தும் இருக்கிறது. அவருடைய தன்மையான பண்பு அவரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும். எல்லோருடைய ஆசைக்காக சஞ்சய் ஹீரோவாக நடிக்கவும் வேண்டும். நன்றி”.
நடிகர் சந்தீப் கிஷன், “நான் தமிழில் எப்போதாவது தான் படங்கள் நடிப்பேன். சிக்மா படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்த தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டி இருக்கிறார்கள். என்னுடன் பணிபுரிந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. மாநகரம் படத்திற்கான பட்ஜெட்டில் தான் விக்ரம் படத்தினுடைய ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதை லோகேஷ் கனகராஜிடமும் சொன்னேன். அப்படியான பிரம்மாண்டமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. ‘லியோ’ பட பூஜையின் பொழுது விஜய் சாரை சந்தித்தேன். அவர் என்னுடைய படங்களை பாராட்டினார். அதைப்போல அவருடைய மகன் சஞ்சய்க்கும் என்னை பிடிக்கும் என சொன்னார். அதை இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன். ஏனெனில், சஞ்சய்யின் முதல் படத்தில் நான் தான் ஹீரோ. தங்களது சுய அடையாளத்திற்காக போராடும் பலரின் கதை தான் ‘சிக்மா’. என்னுடன் பணிபுரிந்த சக நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் தமனுடன் எனக்கு இது நான்காவது படம். சிறப்பாக இசையமைத்திருக்கிறார். படம் அக்டோபர் இரண்டு திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை”.

இயக்குநர் ஜேசன் சஞ்சய், “நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். ‘சிக்மா’ படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு தேவை, சிக்கல் இருக்கும். அப்போது அவர்கள் எடுக்கும் ஒரு முடிவால் அவர்கள் வாழ்க்கையே மாறுவதுதான் ‘சிக்மா’. இது என்னுடைய முதல் படம் என்பதால் எப்போதுமே ஸ்பெஷல். இந்த படத்தின் கதையை லைகா புரொடக்க்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாரிடம் சொன்னபோது எனக்கு 22 வயது. அந்த வயதில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அடுத்ததாக, தயாரிப்பாளராக தமிழ்குமரன் சாரிடம் கதை சொன்னதும், இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்து ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. சந்தீப் என்னுடைய முதல் பட ஹீரோ. திறமையானவர். இந்த படம் அவருடைய கரியரில் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். ஃபரியாவுக்கு தமிழில் இதுதான் முதல் படம். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும் இவருடைய நிஜ கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அந்த அளவுக்கு நேர்மையானவர், சுதந்திரமானவர். அவருக்கு தமிழில் இந்த படம் நிச்சயம் நல்ல வரவேற்பு கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன். நடிகர்கள் ராஜூ சுந்தரம் மாஸ்டர் சம்பத் மற்றும் என்னுடைய தொழில்நுட்ப குழுவினர் எடிட்டர் பிரவீன் சார், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் சார், அனுஷா, இசையமைப்பாளர் தமன், என்னுடைய சித்தப்பா சஞ்சீவ் சார் என சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. தமன் இசையில் யுவன் சங்கர் ராஜா சார், சந்தோஷ் நாராயணன் சார், ஷான் ரோல்டன் பாடல் பாடியிருப்பது எனக்கு மகிழ்ச்சி. துல்கர் சல்மான் சார், ராஜமெளலி சார், பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் சூரி சார் எல்லோருக்கும் நன்றி.

என்னுடைய அம்மா, அப்பா, தங்கை திவ்யா எல்லோருக்கும் நன்றி. படம் அக்டோபர் 2 திரையரங்குகளில் வெளியாகிறது”.
