kollywood news

சென்னையிலிருந்து திருச்சிக்கு… வாழ்நாளில் மறக்க முடியாத முதல் விமானப் பயணக் கனவை நினைவாக்கும் ரெயின்ட்ராப்ஸ்!

சென்னையிலிருந்து திருச்சிக்கு… வாழ்நாளில் மறக்க முடியாத முதல் விமானப் பயணக் கனவை நினைவாக்கும் ரெயின்ட்ராப்ஸ்!

குழந்தைகள் தினத்தில் வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், முதியோர் மற்றும் சிறப்புத் தேவையுடையோருக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்கும் ரெயின்டிராப்ஸ் – வானமே எல்லை!
வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கும் வகையில், ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷன் சார்பில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை’ என்ற சிறப்பான முன்னெடுப்பு நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 14, 2026, சனிக்கிழமை, சென்னையிலிருந்து திருச்சிக்கு 50 பயனாளிகள் விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களில் பலருக்கு இதுவே முதல் விமானப் பயணமாக அமைய உள்ளது. பொருளாதாரச் சூழல் காரணமாக இதுவரை எட்ட முடியாத கனவாக இருந்த விமானப் பயணம், இந்த முன்னெடுப்பின் மூலம் நனவாக உள்ளது.

பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் மகிழ்ச்சிப் பயணம்!
இந்தப் பயணத்தில் ஆனந்தம் கல்வி மையம், ஆனந்தம் சிறப்புப் பள்ளி, சேவாலயா, மாற்றம் ஃபவுண்டேஷன் மற்றும் ரெயின்டிராப்ஸ் கல்வி உதவித்திட்டத்தின் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ரெயின்டிராப்ஸ் அன்பகம் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய ஒரு மாணவர் மற்றும் ஒரு திருநம்பி ஆகியோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.

குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களை ஒரே பயணத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், வயது, உடல்திறன், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கடந்து அனைவருக்கும் சமமான மகிழ்ச்சியும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை இந்த முன்னெடுப்பு வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் உள்ளடக்கிய ரெயின்டிராப்ஸ் பயணம்!
ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை முன்னெடுப்பின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, இந்த ஆண்டு நடைபெறும் சென்னை – திருச்சி விமானப் பயணத்தின் மூலம், கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பில் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் ரெயின்டிராப்ஸ் உள்ளடக்கியுள்ளது.

வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, பல ஆண்டுகளாகப் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது. இந்த ஆண்டின் பயணம், ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை முயற்சியின் பயணத்தில் மற்றுமொரு மகிழ்ச்சியான மைல்கல்லாக அமைவதுடன், இன்னும் பலரது கனவுகளுக்குச் சிறகளிக்கும் ஊக்கமாகவும் அமையும்.

வானில் தொடங்கி, சோழர்களின் வரலாற்றுப் பாதையில் ஒரு பயணம்!
திருச்சி சென்றடைந்ததும், குழுவினர் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையை (Grand Anicut) பார்வையிட உள்ளனர். கரிகால சோழனால் கட்டப்பட்ட உலகின் பழமையான பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புகளில் ஒன்றான கல்லணை, தமிழர்களின் பொறியியல் திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் சென்று உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் திருக்கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்) பார்வையிட உள்ளனர். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோயில், சோழர் காலக் கட்டிடக்கலையின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

இந்தச் சுற்றுலா மற்றும் பாரம்பரியப் பயணத்தைத் தொடர்ந்து, அனைவரும் ரயில் மூலம் சென்னைக்குத் திரும்ப உள்ளனர். முதல் விமானப் பயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடுதல், புதிய அனுபவங்கள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து உருவாகும் அன்பான பிணைப்பு என இந்தப் பயணம் பங்கேற்பாளர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைப் பரிசளிக்க உள்ளது.

ஆனந்தம் மற்றும் VGP உலகத் தமிழ்ச் சங்கம் ஆதரவுடன்!
இந்த ஆண்டின் ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை முன்னெடுப்பு, ஆனந்தம் டிரஸ்ட் மற்றும் VGP உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இந்தச் சிறப்புப் பயணத்தில் ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷனின் நல்லெண்ணத் தூதர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரைஹானா மற்றும் VGP குழுமத்தின் டாக்டர் வி.ஜி. சந்தோசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அரவிந்த் ஜெயபால் மற்றும் ரெயின்டிராப்ஸ் குழுவினரும் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.

நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில்: “நம்மில் பலருக்கு விமானப் பயணம் என்பது ஒரு சாதாரண அனுபவமாக இருக்கலாம். ஆனால், இந்தக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அது வாழ்நாள் கனவாக இருக்கிறது. அவர்களுக்கு விமானப் பயணத்தை மட்டும் வழங்குவது எங்கள் நோக்கமல்ல; அவர்கள் மதிக்கப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய கனவுகளும் முக்கியமானவை என்ற உணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.
இந்த ஆண்டு பயணத்தின் மூலம், கடந்த பல ஆண்டுகளாக எங்களது வானமே எல்லை முன்னெடுப்பில் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் உள்ளடக்கியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை என்பது வெறும் விமானப் பயணம் மட்டுமல்ல; வசதி வாய்ப்புகள் குறைந்தவர்களின் கனவுகளுக்கு சிறகளிக்கும் ஒரு தொடர் சமூக முன்னெடுப்பாகும். கனவுகளுக்கு வயது கிடையாது, திறன்களின் அடிப்படையில் கனவுகள் கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அழகான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

Get real time updates directly on you device, subscribe now.