‘அருள்வான் ’ விமர்சனம்

ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் பூங்குடி மலைவாழ் பகுதியில் வசித்து வருகிறார். மலை உச்சிகளில் இருந்து தேன் சேகரிப்பதே அவரது தொழில்.அப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வன அதிகாரி ஜான் விஜயின் நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது.
மலைப்பகுதியில் கல்வி வசதி இல்லாததால் பள்ளிக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.இருந்தாலும் தனது மகள் கிருத்திகாவை எப்படியாவது படிக்க வைப்பேன் என்று ஆரவ் உறுதி எடுக்கிறார்.
அங்கிருக்கும் பள்ளி ஆசிரியையைச் சந்திக்கும் கிருத்திகாவிடம் உங்கள் கிராமத்திற்கு பள்ளி வர வேண்டுமெனில், ஊர் மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்” என்று கூறுகிறார்.இதற்கிடையில் ஊர் தலைவராக இருக்கும் ஆரவின் மாமாவிடம் வெற்றுக் காகிதத்தில் கைரேகை வாங்கி மலைவாழ் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது.இதனால் மனவேதனை அடைந்த மாமா தனது கட்டைவிரலை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஊர் மக்களை ஒன்றிணைத்து கலெக்டரைச் சந்திக்க ஆரவ் முடிவு செய்கிறார்.ஆனால் அதே நேரத்தில் கிருத்திகா பருவமடைகிறார்.இதனால்  ஒரு வாரம் கிராமத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது மேலும் உடனடியாக அந்த பருவமடைந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதும் அந்த சமூகத்தின் பழக்கமாக உள்ளது.கல்விக்காக இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கலெக்டரைச் சந்திக்கச் செல்லும் கிருத்திகா வழியில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.இறுதியில், கிருத்திகா குணமடைந்தாரா கலெக்டரைச் சந்தித்து தனது கிராமத்திற்கு கல்வி வசதி பெற்றுத் தந்தாரா அவரது கல்விக் கனவு நனவானதா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆட்சியராக நடித்திருக்கும் அருள்நிதி, அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான இருக்கிறார்.எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியுடன் பேசும் காட்சியில் அனைவரது மனதில் தனி இடம் பிடிக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், மலைவாழ் மக்களின் உற்ற தோழனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆரவின் மனைவியாக ரம்யா பாண்டியன், மலைவாழ் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார்.
படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திகா கல்வி கற்கத் துடிக்கும் சிறுமியாக தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
மற்றும் காளி வெங்கட்,வி டி வி கணேஷ், ஜான் விஜய்,பருத்திவீரன்’சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
எம்.சுகுமார் ஒளிப்பதிவும்,ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையும் கதைக்கு பலம்
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வியின் அவசியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வலுவான திரைக்கதையாக அமைத்து சிறந்த முறையில் உருவாக்கியுள்ள இயக்குநர் கணேஷ் விநாயகன் அவர்களுக்கு பாராட்டுகள். “அருள்வான்” கல்வியின் அவசியத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.