300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய அளவிலான ட்ரோன் விருது பெற்ற சாதனையாளர்
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளைப் பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் எம். அரவிந்த் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அவர், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘இந்தியன் 2’, ‘LIK’, ‘வேட்டையன்’, ‘பைசன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படமான ‘ரணபாலி’ உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் ட்ரோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ட்ரோன் காட்சிகள் மூலம் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் கதைக்கேற்ற வான்வழி காட்சிகளை துல்லியமாகப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களுக்கான உயர்தர ட்ரோன் காட்சிப் பதிவுகளையும் (Stock Shots) வழங்கி வருகிறார். இதன் மூலம் திரைப்பட உலகில் “ட்ரோன்மேன்” என்ற பெயரால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள South Asian Media School-இன் Fellow-ஆகவும் இருந்துள்ளார். திரைப்படங்களில் பெற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர வேண்டும் என்ற எண்ணத்தில், ZOO Studios India நிறுவனத்தின் கீழ் DroneMan Academy-யை நிறுவினார். “ட்ரோன் என்பது வெறும் கேமரா இயக்கும் கருவி மட்டுமல்ல; எதிர்கால தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கம்” என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அதற்கான நவீன பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
2014 முதல் 2017 வரை அமெரிக்காவில் உள்ள பல இந்திய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியபோது, ட்ரோன் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வழங்கிய ஊக்கத்தின் பேரில், 2017-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறையில் ட்ரோன் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்ரோன் பயிற்சி முகாம்களை நடத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்கியுள்ளார். குறிப்பாக EDII MediaDrone உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய பயிற்சிகள் மூலம், ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஆராய்ச்சி மற்றும் புதுமை நோக்கி வழிநடத்தி வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற பலர் இன்று திரைப்படத் துறையிலும், ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் சென்னை வண்டலூரில் நவீன ட்ரோன் ஆய்வகத்தையும் நிறுவியுள்ளார். ட்ரோன்களை வடிவமைத்தல், நிரலாக்கம், சோதனை மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாடுகள் வரை அனைத்தையும் மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, மாணவர்களை வேலைவாய்ப்புக்குத் தயாரான திறமையாளர்களாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட மாணவர்கள் சமீபத்தில் தேசிய அளவிலான முதல் NIDAR Drone 2025-26 போட்டியில் இரட்டை வெள்ளி விருதுகளை வென்று கவனம் பெற்றனர். அந்த வெற்றியை தனது சாதனையாக அல்லாமல், தமிழக இளைஞர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே அரவிந்த் குமார் கருதுகிறார். கிடைத்த பரிசுத் தொகையையும் மீண்டும் DroneMan Academy ஆய்வக வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவு செய்திருப்பது, மாணவர்களின் எதிர்காலமே தனது மிகப்பெரிய முதலீடு என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு சாதாரண ட்ரோன் கேமராமேனாக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ட்ரோன் ஆர்வலர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கும் முன்னணி அகாடமியாக DroneMan Academy-யை உருவாக்கியுள்ளார். திரைப்பட உலகிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையிலும் தனித்துவமான தடம் பதித்திருக்கும் எம். அரவிந்த் குமார், தனது அனுபவத்தை அடுத்த தலைமுறையின் வெற்றியாக மாற்றிக் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டியாக திகழ்கிறார்.

அண்மையில் Drone Federation of India வழங்கிய தேசிய அளவிலான ட்ரோன் விருதைப் பெற்று அவரது DroneMan Academy குழு கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை தமிழ்நாடு அரசும் பாராட்டியுள்ளது. மேலும், வரவிருக்கும் India’s NIDAR 2.0 ட்ரோன் போட்டியில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 10 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது அகாடமி மூலம் மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறார்.
